புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனம் இருப்பது தெரியவந்ததால் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.
புதுச்சேரியில் உள்ள கோரிமேடு பகுதியில் விற்கப்பட்டு வந்த பஞ்சு மிட்டாய்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ரோடமைன்-பி என்ற ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த இரசாயனம் புற்றுநோயை உண்டாக்க வல்லது என்பதையும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதனையடுத்து பஞ்சு மிட்டாய் விற்பனை புதுச்சேரியில் தடை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை மெரினாவில் விற்பனையாகி வந்த பஞ்சு மிட்டாயை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர்.
சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட பஞ்சு மிட்டாய்களிலும் ரோடமைன்-பி ரசாயனம் இருப்பது தெரியவந்ததை அடுத்து, தமிழகத்தில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்படுவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.