அமெரிக்க வரி விதிப்பு குறுகிய கால பாதிப்பை ஏற்படுத்தும், நீண்ட கால இழப்பாக இருக்காது என வர்த்தக அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
உலகின் பல நாடுகளுடன் வர்த்தகப் போரை நடத்தி வரும் அமெரிக்கா முதலில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25% வரி விதித்தது. இந்த வரி விதிப்பு கடந்த 7ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது.
இந்த அளவுக்கான வரி விதிப்பே இந்திய ஏற்றுமதித் துறையை மிகக் கடுமையாக பாதிக்கும் என்று தொழில்துறையினர் அஞ்சிய நிலையில், இரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு தண்டம் விதிக்கும் வகையில் மேலும் 25% இறக்குமதி வரி விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்த வரி விதிப்பும் நேற்று நடைமுறைக்கு வந்துள்ளது. பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு, பல லட்சம் பேருக்கு வேலையிழப்பு என அமெரிக்க வர்த்தகப் போரின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்நிலையில் இந்திய பொருட்களின் ஏற்றுமதியை பன்முகப்படுத்த தொழில்துறைக்கு மத்திய வர்த்தக அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் அமெரிக்க வரி விதிப்பு குறுகிய கால பாதிப்பை ஏற்படுத்தும், நீண்ட கால இழப்பாக இருக்காது என வர்த்தக அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜவுளி, ரசாயனம் உள்ளிட்ட துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் தொழில்துறையினர் குறுகிய காலத்தில் பணப்புழக்க நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என்றும் வர்த்தக அமைச்சகம் கூறியுள்ளது.
ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சக அதிகாரி தகவல் கூறியுள்ளார்.
