கன்னியாகுமரி கோயிலில் வீற்றிருக்கும் அம்மன், குமரி அம்மன், பகவதி அம்மன், பகவதி தேவி என்று அழைக்கப்படுகிறாள்.
இந்த அம்மை ஏன் கன்னியாகுமரி என்று அழைக்கப்படுகிறாள் ? இந்த கடற்கரையில் உள்ள மணல் வண்ணங்களாக மிளிர்வது ஏன்?என்பது பற்றி இப்போது பார்க்கலாம் .
பகவதி எழுந்தருளி இருக்கும் இந்த திருக்கோயில், இந்தியாவின் தென் கோடியில் அமைந்துள்ளது. கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவும், மேற்குப் பகுதியில் அரபிக் கடலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள இக்கோயில், பராசக்தியின் சக்தி பீடங்களில் ஒன்றாக புகழுடன் விளங்குகிறது. சக்தியின் முதுகு தண்டு விழுந்த இடம் இது என்று கூறுகிறது தலபுராணம்.
நாகர் கோவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் இத்திருத்தலம் சக்தி தலங்களில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கி தவமிருந்து , ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தன்னை அழிக்க முடியாது என்னும் வரத்தைப் பெற்றான்.
மென்மையும் உடலும் மனதும் உடைய கன்னிப் பெண் தன்னை அழிக்க முடியாது என்ற எண்ணத்தில் இப்படி ஒரு வரத்தை வாங்கிய பாணாசுரன், முனிவர்கள், தேவர்கள், என அனைவருக்கும் கொடுமை செய்து வந்தான்.
எல்லோரும் இறைவனிடம் சென்று முறையிட்டனர். பிறகு பாணாசுரன் வாங்கிய வரத்தைப் பற்றி தெரிந்து கொண்ட தேவர்களும் முனிவர்களும் சக்தியை நோக்கித் தவமிருந்தனர்.
பாணாசுரனிடம் இருந்து தேவர்களையும் முனிவர்களையும் காப்பாற்ற அம்மை, கன்னிப் பெண்ணாக குமரியில் அவதரித்து ,ஈசனை மணம் முடிக்க தவமிருந்தாள்.
அதே சமயம் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்துவந்த ஈசன் அம்மையை திருமணம் செய்ய முடிவு செய்தார்.
திருமண பேச்சு வந்தது .திருமணம் நடந்துவிட்டால், பாணாசுர வதம் நடைபெறாமல் போய் விடுமே என்று எண்ணி நாரதர் ஒரு கோரிக்கை வைத்தார்.
அதாவது சூரிய உதயத்துக்கு ஒரு நாழிகைக்கு முன்னதாகவே மாப்பிள்ளை திருமணத்துக்கு வந்து விட வேண்டும் அப்படி வரவில்லை என்றால் திருமணம் நின்று விடும் என்றும் கூறப்பட்டது.
திருமண நாளன்று , சிவனும் குமரிக்குப் புறப்பட்டார். சூரிய உதயத்துக்கு முன்பே நாரதர் சேவலாக உருவெடுத்து கூவினார். சூரியன் உதித்து விட்டான் என்று சிவபெருமான் சுசீந்திரத்துக்கே திரும்பி விட்டார்.
சிவன் வரவில்லை என்றதும் குமரியில் திருமணத்துக்கு காத்திருந்த அம்மைக்கு கோபம் உச்சத்துக்கு சென்றது. திருமணத்துக்கான ஏற்பாடு செய்து வைத்திருந்த உண்வுகளையும்,பூக்களையும் கடல் மணல் பரப்பில் வீசினாள்.
]அதனால் தான் இன்றும் இங்குள்ள கடல் மணல் வண்ணங்களாக இருக்கிறது என்று கூறப்படுகிறது.
கன்னிக் குமரியின் அழகில் மயங்கி பாணாசுரன் தேவியை மணக்க வந்த போது , வானளாவிய வடிவம் எடுத்த சக்தி, பாணாசுரனை தன் கால்களால் மிதித்து வதம் செய்தாள்.
ஒரு புரட்டாசி மாதம் அமாவாசை தொடங்கி 9 நாட்கள் விரதமிருந்து விஜய தசமி நாளில் பாணாசுரனை வதம் செய்தாள் என்று சொல்லுகிறார்கள்.
தேவர்கள், முனிவர்கள் பூக்கள் தூவி அம்மைக்கு நன்றி தெரிவித்தனர். இது தான் கன்னியா குமரி பகவதி அம்மன் திருக்கோயிலின் தலவரலாறு.
பாணாசுரனை அழித்த அம்மை ,இங்கே இந்த கோயிலில் கையில் ஜெப மாலையுடன் மின்னும் மூக்குத்தியுடன் தம்மை நாடி வரும் பக்தர்களுக்கு இன்றும் அருள் வழங்கி கொண்டிருக்கிறாள்.
திருமண நடைபெறாமல் தாமதமாகும் கன்னிப் பெண்கள், இக்கோயிலுக்கு வந்து பகவதியை வணங்கி வழிபட்டு சென்றால் , விரைவில் திருமணம் நடைபெறும் என்று சொல்லுகிறார்கள் பக்தர்கள்.
காசிக்கு தல யாத்திரை செல்லும் முன், இக்கோயிலுக்கு வந்து பகவதி அம்மனை வழிபட்டு, இங்கிருந்து தீர்த்தம் மணல் எடுத்துக்கொண்டு காசி விஸ்வ நாதரை வணங்கி மீண்டும் இங்கே வந்து அம்மையை வழிபடுவது வழக்கமாக இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள்.