அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி – செங்கோட்டையன் இருவருக்கும் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க, எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு விதித்திருந்தார். அவரது கருத்துக்கு ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் ஆதரவு தெரிவித்த நிலையில், செங்கோட்டையன் அதிரடியாக கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து, செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அதிமுக தலைமை மீது கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மேலும், அவர்களில் நூற்றுக்கணக்கானோர் தங்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தும் வருகின்றனர். இந்நிலையில், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களுடன் சமரசம் பேச தயாராக இருப்பதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன், “டிடிவி தினகரன் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்கள்தான் உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் இணைந்தால் மட்டுமே அதிமுக – பாஜக கூட்டணியால் ஆட்சியமைக்க முடியும் என உயர்மட்டக் குழு கூட்டத்தில் பேசியவன் நான்.
பாஜக கூட்டணியை விட்டு டிடிவி வெளியேறியதற்கு நான் பொறுப்பாக முடியாது. யாரும் வெளியேறுவதற்கு நான் காரணம் கிடையாது. அவர் ஏன் கூட்டணியில் இருந்து வெளியேறினார் என அவர்தான் சொல்ல வேண்டும். அதிமுகவில் பிரிந்த அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். அனைவரும் கேட்டுக் கொண்டால், டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துடன் சமரசம் பேச நான் தயாராக உள்ளேன். செங்கோட்டையன் விவகாரத்தின் பின்னணியில் பாஜக கிடையாது.
திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், ஒருமித்த கருத்துடன் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்பதே எனது நோக்கம். திமுக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடித்தது கிடையாது. மேலும், அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமியை கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் என அண்ணாமலை உறுதிப்படுத்தினார். அதிமுக கூட்டணியில் பலம் நிச்சயம் கூடும்” என்றார்.