அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் பவானிசாகர் தொகுதி எம்எல்ஏ பண்ணாரி.
அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்கள் கெடு விதித்தார்.
இதையடுத்து, செங்கோட்டையன் கட்சிப் பதவிகள் பறிக்கப்பட்டன. அவர் வகித்து வந்த ஈரோடு மேற்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் மேட்டுப்பாளையம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ் நியமிக்கப்பட்டார்.
செல்வராஜ் மேட்டுப்பாளையத்தில் உள்ள தனது எம்எல்ஏ அலுவலகத்தில் பதவியேற்க, அதிமுகவினர் பலர் வந்து வாழ்த்து தெரிவித்தனர். இதில், செங்கோட்டையனின் நெருங்கிய ஆதரவாளராகக் கருதப்பட்ட பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரியும் கலந்து கொண்டு, செல்வராஜுக்கு ஆதரவைத் தெரிவித்தார்.
“இயக்கம் தான் பெரிது; தனி நபர் அல்ல. இங்கு வந்துள்ள இயக்க நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருக்கும் நன்றி,” என்று பண்ணாரி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஏ.கே. செல்வராஜ், “அதிமுக என்பது ஒரு மாபெரும் இயக்கம். இது ஒரே ஒரு நபரை சார்ந்தது அல்ல.
பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வழிகாட்டுதலின் கீழ், எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் ஒருமித்து செயல்படுவோம்,” என்றார்.
மேலும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் எம்எல்ஏ பண்ணாரியை மட்டும் இபிஎஸ் நீக்கவில்லை. இந்த நிலையில் அவர் தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளது செங்கோட்டையன் ஆதரவாளர்கள் மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.