2025ஆம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வான (TET) டெட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் கடந்த செப்டம்பர் 10ஆம் தேதியுடன் முடிவடைந்தன. இந்தத் தேர்வுக்காக தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 4,80,123 பேர் விண்ணப்பித்துள்ளதாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் ஏற்கனவே பணியில் இருக்கும் அரசு ஆசிரியர்களும் தேர்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர்.
பொதுவாக அரசு ஊழியர்கள் வேறு தேர்வுகளில் பங்கேற்க துறையின் “தடையில்லாச் சான்றிதழ்” பெறவேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், டெட் தேர்வுக்காக பலர் தற்போது மாவட்டக் கல்வி அலுவலகங்களில் அத்தகைய சான்றிதழுக்காக விண்ணப்பித்து வருகிறார்கள். இதனால் அலுவலகங்களில் சற்று பரபரப்பான சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், டெட் தேர்வை எழுதுவதற்காக அரசு ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற வேண்டிய அவசியமில்லை என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்த தகவலை ஆசிரியர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டுமெனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களிடையே ஏற்பட்ட குழப்பம் இதனால் தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.