ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவுக்கு வருவதற்கு முன்னதாக, இந்தியாவுடனான பரஸ்பர தளவாட பரிமாற்ற ஆதரவு ஒப்பந்தத்தை ரஷ்யா நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளது.
இதன் மூலம், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இரண்டு வல்லரசுகளுடன் சரக்கு போக்குவரத்து பரிமாற்ற ஒப்பந்தம் செய்துள்ள ஒரே நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. Relos ரெலோஸ் ஒப்பந்தம் என்றால் என்ன? இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு ஏன் முக்கியமானது? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
வரலாற்று ரீதியாக நீண்டகாலமாகவே இந்தியாவின் சிறந்த நட்பு நாடாக இருக்கும் ரஷ்யாவின் அதிபர் புதின் கடந்த 2021ம் ஆண்டு இந்தியா வந்தபோது இரு தரப்பு உறவுகளிலும் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டது. குறிப்பாக, சுமார் 6 லட்சம் AK-203 துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன. RELOS என்ற பரஸ்பர ராணுவ தளவாட ஆதரவு ஒப்பந்தம் ரஷ்ய நாடாளுமன்ற ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப் பட்டது.
இந்நிலையில், டெல்லியில் நடக்கும் இந்தியா ரஷ்யா உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்ய அதிபர் புதின் இந்தியா வருகிறார். இதையொட்டி, இந்தியாவுடனான வரலாற்று சிறப்புமிக்க RELOS ஒப்பந்தத்தை ரஷ்யா அங்கீகரித்துள்ளது. கடந்த வாரம் ரஷ்ய பிரதமர் மிகைல் மிஷுஸ்டின் பரஸ்பர தளவாட ஆதரவு பரிமாற்றம் ஒப்பந்தத்தை அனுப்பியதைத் தொடர்ந்து, நாடாளுமன்றக் கீழ் சபை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய- ரஷ்ய உறவு மேலும் வலிமை பெற்றுள்ளது.
இதைப் பற்றிப் பேசிய நாடாளுமன்றக் கீழவையின் சபாநாயகர் வியாசெஸ்லாவ் வோலோடின், இந்தியாவுடனான ஆழமான உறவை மதிப்பதாகவும், RELOS ஒப்பந்தம் இருநாடுகளின் வளர்ச்சியில் ஒரு முக்கிய படியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ராணுவ துருப்புகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள், பரஸ்பர தளவாட ஆதரவுக்கான எரிபொருள், ஆயுத உதிரிபாகங்கள் ஆகியவற்றை ஒருவருக்கொருவர் அனுப்புவதற்கு இந்த ஒப்பந்தம் அனுமதி அளிக்கிறது.
கூட்டுப் பயிற்சிகள், பயிற்சித் திட்டங்கள், மனிதாபிமான நடவடிக்கைகள் மற்றும் பேரிடர் நிவாரணப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளுக்கும் ஒருவருக்கொருவர் தத்தம் வசதிகளைப் பயன்படுத்துவதையும் உறுதி செய்கிறது. எந்த நேரத்திலும், 5 இந்திய போர்க்கப்பல்கள், 10 இந்திய ராணுவ விமானங்கள், சுமார் 3,000 இந்திய துருப்புக்கள் வரை ரஷ்ய மண்ணில் தொடர்ந்து 5 ஆண்டுகள் வரை நிலைநிறுத்தி வைக்கலாம்.
மாஸ்கோவிலிருந்து சுமார் 2,450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆர்க்டிக் முதல் மத்திய ஆசியா வரை, இந்தியா தனது ஆதிக்கத்தை ஆழமாக வேரூன்ற இந்த ஒப்பந்தம் வழிவகை செய்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, ரெலோஸ் ஒப்பந்தம் இராணுவ தளவாட ஆதரவை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும், கூட்டு நடவடிக்கைகள் மற்றும் நீண்ட தூர பயணங்களைக் குறைந்த செலவில் அமைக்கவும் உதவுகிறது.
சுகோய் போர் விமானங்கள், T-90 பீரங்கிகள் மற்றும் S-400 வான் பாதுகாப்பு அமைப்புகளை ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு, அந்நாட்டின் ஆயுத தளவாட நெட்வொர்க்குடன் ஒருங்கிணைந்து செயல்படவும் துணை செய்கிறது இந்த ஒப்பந்தம். 2016ம் ஆண்டு, அமெரிக்காவுடன் LEMOA என்ற சரக்கு போக்குவரத்து பரிமாற்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா, தொடர்ந்து, இங்கிலாந்து, ஜப்பான், ஆஸ்திரேலியா, பிரான்ஸ், சிங்கப்பூர், தென் கொரியா மற்றும் வியட்நாம் உள்ளிட்ட பல நாடுகளுடனும் இதுபோன்ற பாதுகாப்பு மற்றும் இராணுவ ஒப்பந்தங்களைச் செய்துள்ளது.
இந்தியப் பெருங்கடலைக் கண்காணிக்கவும், கடல் வர்த்தகத்தின் பாதுகாப்பான பாதையை உறுதி செய்யவும், கடல்சார் கள விழிப்புணர்வை அதிகரிக்கவும், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்தை வழங்கவும், எதிர்பாராத பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடவும், இந்தோ-பசிபிக் முழுவதும் பெரிய அரணாக இந்தியாவின் கடற்படை உள்ளது.
இப்போது ரஷ்யாவுடனான ரெலோஸ் ஒப்பந்தம், உலகளாவிய கடற்படை சக்தியாக இந்தியாவை மாற்றியுள்ளது. உண்மையில் மேற்கத்திய பாதுகாப்பு சூழலில் மட்டுமல்ல யூரேசிய பாதுகாப்பு சூழலிலிலும் இந்தியா ஆழமாக நங்கூரமிட்டுள்ளது என்றே கூறலாம்.
