சின்னசேலத்தைச் சேர்ந்தவர். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 2011 முதல் விக்கிமீடியா திட்டங்களில் பங்களித்து வருகிறார்.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தில் உதவி இயக்குநராக பணியாற்றியபோது தமிழக அரசு, அரசுசார் வெளியீடுகளை படைப்பாக்க பொதும உரிமையில் வெளியிடவும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான நூல்கள் படைப்பாக்க பொதும உரிமையில் இணையத்தில் வெளியிடவும் பங்களித்தவர்.
தமிழ்ப் பேழை: மாபெரும் தமிழகராதி பற்றி…
www.MyDictionary.in என்னும் இணையதளத்தின் வாயிலாகத் தமிழின் ஒருங்கிணைந்த அகராதி வளங்களை (combined dictionary) தமிழ்ப் பேழைத் திட்டம் உருவாக்கியுள்ளது.
தமிழ் அகராதி வளங்களை உலக அளவில் மேம்படுத்திட 1.6 கோடிக்கும் மேற்பட்ட விளக்கங்களுடன் கடந்த பதினைந்து ஆண்டுக்கும் மேற்பட்ட உழைப்பால் தமிழ்ப் பேழை உருவாகியுள்ளது.
தற்போது உலக அளவில் அதிகச் தமிழ்ச் சொற்களுடன் திகழும் மாபெரும் தமிழகராதியாக இது உள்ளது. இணையத்தில் தமிழை மேம்பட்ட சொற்பதிவுகள் கொண்ட முதல்மொழியாக மாற்றும் நோக்கில் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்பணியால் உலக அளவில் 23ஆம் இடத்தில் இருந்த தமிழின் அகராதி வளங்கள் தற்போது எட்டாம் இடத்திற்கு வந்துள்ளது. இத்திட்டத்திலுள்ள அகராதிகள் படைப்பாக்கப் பொதும உரிமையில் (CC BY-SA Creative Commons License) வழங்கப்பட்டுள்ளன.
இத்தளத்தின் தேடுபொறியில் ஒரு சொல்லினைத் தேடினால் அச்சொல் 72க்கும் மேற்பட்ட அகராதிகளிலும் தேடப்பட்டு அதன் விளக்கங்கள் முழுமையாக அளிக்கப்படும்.
இத்திட்டத்தினைச் செயற்படுத்தும் பன்னாட்டு தமிழாய்வுக் கழகத்தால் 2800க்கும் மேற்பட்ட தமிழ் அகராதிகள் ஆவணப்படுத்தப்பட்டுக் காக்கப் பெற்றுள்ளன.
தமிழ்ப் பேழை அகராதியில் அறிவியல், பொறியியல் உயிரியல், மருத்துவம், வேளாண்மை, வானியல், கானியல் என 160க்கும் மேற்பட்ட துறைகளின் அருங்கலைச் சொற்கள் அளிக்கப் பெற்றுள்ளன.
இத்தளம் தமிழின் இலக்கண, இலக்கிய அகராதிகளையும் அளித்துள்ளது.
தொல்காப்பியம் அகநானூறு, திருக்குறள், சிலப்பதிகாரம், திருவருட்பா முல்லைப்பாட்டு ஆகியவற்றின் சொற்களை அதன் விளக்கங்களுடனும் பாடல் எண்களுடனும் ஒருங்கிணைந்த முறையில் தந்துள்ளது.
இத்தளம் தற்போது தேடுபொறிக்கு ஏற்ற வகையில் பழமொழி, விடுகதை நூல், தமிழிதழ், திரைப்படங்கள் ஆகியவற்றின் தரவுகளையும் அளித்துள்ளது.
தரவுகளை அதன் பொருண்மை அடிப்படையில் தேடும் வசதியை இத்தளம் கொண்டுள்ளது.
இத்திட்டம் இன்னும் மூன்றாண்டுகளில் இரண்டு கோடிக்கும் மேற்பட்ட அடிப்படைச் சொற்கள் இருபது கோடி விளக்கங்கள், மூன்று இலட்சம் பழமொழிகள், ஒரு இலட்சம் விடுகதைகள், நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள்,
பதினைந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழிதழ்கள் போன்றவற்றின் தரவுகளை எதிர்காலப் பயன்பாட்டிற்கு உரியதாக எந்திரங்களும் படிக்கும் வகையில் அளிக்க (machine readable) உள்ளது.
இந்த அகராதிப் பணிக்கு உரிய நிதி கிடைத்தால், தற்போது உலக அளவில் எட்டாம் இடத்திலுள்ள தமிழ் அகராதி வளங்கள் மூன்று ஆண்டுகளில் இணையத்தில் முதல் இடத்தினை அடையும்.
தமிழ்ப் பேழை அகராதி முன்னெடுப்புகள் முற்றிலும் தமிழ் ஆர்வலர்களின் உறுதுணையால் உருவாகியுள்ளது.
தமிழ்ப் பரிதியின் தமிழ்ப் பணிக்கு வாழ்த்துகள்.
சுந்தரபுத்தன்
தமிழுக்கு வளம் சேர்க்கும் ஆய்வாளர் தமிழ்ப் பரிதி!
