சென்னையை அடுத்த திருப்போரூரில் அமைந்துள்ள வொண்டர்லா (Wonderla) பொழுதுப்போக்கு பூங்காவை இன்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து நாளை முதல் இது மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த சவாரிகளான (rides) பொலிகர், மாபில்லார்ட் உள்ளிட்டவை அமைந்துள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே சென்னை வொண்டர்லா எனும் பொழுது போக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முன்னணி பொழுதுபோக்கு பூங்காவான “வொண்டர்லா” ஹைதராபாத், கொச்சி, பெங்களூர், புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம், பழைய மகாபலிபுரம் சாலையில் திருப்போரூரை அடுத்த இள்ளளூரில் ரூ.611 கோடி செலவில் 65 ஏக்கர் பரப்பில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வொண்டர்லாவில் பெரியவர்களுக்கு 42 சவாரிகள் உள்ளன. இவற்றில் 16 நீர் சவாரிகளாகும். குழந்தைகளுக்கென பிரத்யேகமாக 10 சவாரிகள் இருக்கும் எனவே மொத்தம் 52 சவாரிகள் இடம் பெற்றுள்ளது. பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள வொண்டர்லா பொழுதுப்போக்கு பூங்காவை தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
