* தனித் தமிழ் இயக்கத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவரும் தூயத் தமிழ்க் காவலர் என அறியப்பட்ட கு.மு. அண்ணல் தங்கோ அவர்களின் பேரன், வரலாற்று எழுத்தாளர் செ. அருள் செல்வன் எழுதிய மற்றுமொரு சிறந்த வாழ்க்கை வரலாற்று ஆவண நூல் தான் இது !
* ஆசைத்தம்பி வன்னியப்ப பழனியப்ப ஆசைத்தம்பி என்ற – ஏ.வி.பி. ஆசைத்தம்பி என்ற – வாலிபப் பெரியார் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட – திராவிட இயக்கத்தின் ஆரம்ப கால தூண்களில் ஒன்றான – தந்தை பெரியாரைப் போல எதற்கும் அஞ்சாத, எவரையும் கெஞ்சாத உண்மையான திராவிடத் தலைவரின் வாழ்க்கை வரலாற்று நூல் இது !
* திராவிடக் கொள்கைகளில் மிகத் தீவிரமான பற்றும், தந்தை பெரியார் மீது மிகத் தீவிரமான நம்பிக்கையும், அண்ணா மீது மிகத் தீவிரமான அன்பும், திமுக மீது மிகத் தீவிரமான பிடிப்பும் கொண்டு தனது இறுதி மூச்சு வரை கொள்கை மாறாத குன்றாக விளங்கியவர் ஆசைத்தம்பி !
* விருதுநகரில் பிறந்து (24.09.1924) அய்ம்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்து அந்தமானுக்கு கட்சிப் பணிக்காக சென்றவர் அங்கேயே மறைந்து போய் விட்ட (07.04.1979) சோக வரலாறு ஆசைத் தம்பியுடையது !
* ஆசைத்தம்பி ஒரு எழுத்தாளர். பெரியாரைப் போன்று பேசுகின்ற பேச்சாளர், பத்திரிக்கையாளர், திரைப்பட வசனகர்த்தா, சட்ட மன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், திமுகவை தோற்றுவித்த நாளிலிருந்து கட்சியில் இருந்தவர், மிசா கைதி, பலமுறை சிறை சென்றவர்…இப்படி பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையின் வரலாற்றை அறிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது.
* தமிழ் நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது சிறப்பான அணிந்துரையில் ஆசைத்தம்பி யின் சிறப்புகளையெல்லாம் சொல்லி வரும்போது இரண்டு முக்கிய தகவல்களை அதில் குறிப்பிடுகின்றார் .
* முதலாவதாக – ஆசைத்தம்பி அவர்கள் ‘ காந்தியார் சாந்தியடைய ‘ என்ற சிறிய நூலை எழுதி வெளியிட்டதற்காக அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் அவரை கைது செய்து, சிறையிலடைத்து, நிர்வாணப்படுத்தி, மொட்டையடித்து அவமானப்படுத்தியது என்ற வருந்தத்தக்க நிகழ்ச்சியை நினைவூட்டுகின்றார் !
* இரண்டாவதாக – ஆசைத்தம்பி இளைஞராக இருந்த போதே’ ஜஸ்டிஸ் கட்சிக்கு புதிய அமைப்பு வேண்டும் ‘ என்ற கோரிக்கை வைத்து எழுதிய மடல் 1943ம் ஆண்டிலேயே அண்ணாவின் திராவிட நாடு இதழில் வெளியானது. ” இதை வைத்துப் பார்த்தால் 1944ல் சேலத்தில் திராவிடர் கழகம் உருவானதற்கு அடித்தளம் அமைத்தவரே ஆசைத்தம்பி என்று சொல்லலாம் ! ” என முதல்வர் வியந்து குறிப்பிட்டுள்ளார் !
* நூலாசிரியர் செ. அருள் செல்வன் தனது நீண்ட என்னுரையில் – ” நாற்பது ஆண்டுகள் பொது வாழ்க்கையை சற்றுக்கூட வீணாக்காமல், கேளிக்கைகளில் மனம் செலுத்தாமல், தமிழ் சமூகத்திற்கென்றே தம்மை ஒப்படைவு செய்து, பெரியாரின் கொள்கைகளை ஏற்று, அம்பேத்கரின் பாதையில், அண்ணாவின் ஆணைப்படி, கலைஞருடன் கைகோர்த்து ஒரு மாபெரும் சனாதன எதிர்ப்பு நெடும் பயணத்தை நிகழ்த்தியவர் ஆசைத்தம்பி ! ” ….
அவரது நூற்றாண்டு நிறைவில் (1924 – 2024)
அவரது நினைவில்
இந்த நூலை
காணிக்கையாக்கியுள்ளார் என்று சொல்லலாம் !
* நூலை மூன்று பாகங்களாக சிறப்பாக அமைத்துள்ளார்கள்.
முதல் பாகத்தில் :
ஆசைத்தம்பியின் பிறப்பு, இளமைக் காலம், சுயமரியாதை இயக்கத்தில் ஈர்ப்பு, பெரியார் தலைமையில் சீர்திருத்த திருமணம், தனி அரசு இதழ் துவக்கம், திமுக உதயம், சட்ட மன்ற தேர்தலில் பங்கு, மிசா கைதி, நாடாளுமன்றத்தில் உரை, புத்தகம் எழுதியதற்கு கைது, தனி அரசு இதழ்களில் வந்தவை, அந்தமானில் ஆசைத்தம்பியின் இறுதி உரை, ஆசைத்தம்பி மறைவு, கலைஞர் உரை, ஆசிரியர் கி. வீரமணி இரங்கலுரை …..
இரண்டாவது பாகத்தில் :
1957ம் ஆண்டு சட்டமன்ற உரைகள், 1968ம் ஆண்டு சட்டமன்ற உரைகள், 1977ம் ஆண்டு நாடாளுமன்ற உரை, 1979ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இறுதி உரை, தனி அரசு இதழ்களின் ஆவணத் தொகுப்பு…
மூன்றாவது பாகத்தில் :
புகைப்படத் தொகுப்பு, இந்நூல் தொகுக்கப் பயன்பட்ட நூல்களின் பட்டியல் …
* இவ்வளவு வரலாற்று தகவல்களையும் ஆவணங்களையும் படித்துப் பார்த்த பின்பு ஒரு சிலவற்றை யாவது நாம் மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டும் என முடிவு செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில தகவல்கள் :
* உலகத்திலேயே வேறு எந்த நாட்டிலும் எந்த இயக்கமோ கட்சியோ தனது கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சொல்ல இத்தனை இதழ்களை/ பத்திரிக்கைகளை உருவாக்கி நடத்தியதில்லை.
அதுதான் திராவிட இயக்கத்தின் அடித்தளம் !
* தந்தை பெரியார் – குடி அரசு,
அறிஞர் அண்ணா – திராவிட நாடு,
கலைஞர் – முரசொலி,
பாவேந்தர் – குயில்,
இவர்களின் வழிவந்த ஏ.வி.பி.
ஆசைத்தம்பி – தனி அரசு இதழை மாத இதழாக துவக்கி பின்னர் நாளிதழாக நடத்தினார் !
தந்தை பெரியாருக்கு – குடி அரசு பெருமையைத் தந்தது !
வாலிபப் பெரியாருக்கு – தனி அரசு பெயரை தேடித் தந்தது !
* திமுக 1957ம் ஆண்டு முதன் முதலாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. பின்னர் சட்ட மன்ற தேர்தலில் 124 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களில் வெற்றி பெற்றது.
அதில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றி பெற்றவர் ஆசைத்தம்பி !
* எமர்ஜென்சி என்ற நெருக்கடி நிலையில் திமுகவினர் பலரை சிறையில் அடைத்தார்கள். புலவர் பொன்னி வளவன், மைனர் மோசஸ், டி.ஆர். பாலு, பழக்கடை ஜெயராமன், சீதாபதி, சிட்டி பாபு, மு.க. ஸ்டாலின் இவர்களுடன் ஏ.வி.பி.ஆசைத்தம்பியும் அடைக்கப்பட்டார் – மிசா கைதியாக !
* நெருக்கடி நிலைக்குப் பிறகு 1977ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் ஆசைத்தம்பி ! வடசென்னை தொகுதியில் அதிமுகவின் நாஞ்சில் மனோகரனை தோற்கடித்தார் !
ஆசைக்கு ஒரு தம்பி – என் ஆசைத்தம்பி என்று பாராட்டினார் கலைஞர் !
* ஆசைத்தம்பியின் புகழுக்கும் சிறப்புக்கும் பல காரணங்கள் உண்டு..அவற்றில் மிக முக்கியமானது அவர் எழுதிய நூல் தடை செய்யப்பட்ட நிகழ்வு !
* பகத்சிங் எழுதி பெரியார் வெளியிட்ட நான் ஏன் நாத்திகன் ஆனேன் ? ..தடை செய்யப்பட்டது !
அண்ணா எழுதிய ஆரிய மாயை தடை செய்யப்பட்டது !
புலவர் குழந்தை எழுதிய இராவண காவியம் தடை செய்யப்பட்டது !
அந்த வரிசையில் –
ஆசைத்தம்பி எழுதிய சிறிய நூல் ‘ காந்தியார் சாந்தியடைய ‘ அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது !
* 1950ம் ஆண்டு ஆசைத்தம்பி ‘ காந்தியார் சாந்தியடைய ‘ என்ற சிறிய நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் தமிழ் சமுதாயத்தில் ஒரு மாபெரும் எழுச்சியை உண்டாக்கியது ! அன்றைய காங்கிரஸ் அரசாங்கம் சினம் கொண்டு நூலை தடை செய்தது. நூலை எழுதிய ஆசைத்தம்பி, நூலை வெளியிட்ட கலிய பெருமாள் மற்றும் தங்கவேல் மூவரையும் கைது செய்து சிறையில் அடைத்தது ! சிறையில் ஆசைத்தம்பியை நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்தது !
* திருச்சி மாவட்ட நீதிமன்றம் இவர்களுக்கு ஆறு மாத கடுங் காவல் தண்டனை வழங்கி ரூ 500/ அபராதமும் விதித்தது.
பின்னர் மெட்ராஸ் உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உயர் நீதிமன்றம் கீழ்க் கோர்ட் அளித்த தண்டனையை விடுவித்து தள்ளுபடியும் செய்தது. ஆனால் அன்று வெள்ளிக் கிழமை மாலை என்பதால் அடுத்த இரண்டு நாட்களில் விடுதலைக்கு வாய்ப்பில்லாமல் போனது !
* அடுத்த நாள் சனிக்கிழமையன்று – உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டும் சிறையிலிருந்த ஆசைத்தம்பி, கலிய பெருமாள், தங்கவேல் மூவருக்கும் மொட்டையடித்து தனது ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டது காங்கிரஸ் அரசின் சிறை நிர்வாகம் !
* இதன் பிறகு அவர்கள் மூவரும் விடுதலையாகி வெளியே வந்த பின்னர், அண்ணா தனது திராவிட நாடு இதழில் (30.07.1950) மூவரின் மொட்டைத்தலை புகைப்படத்தை வெளியிட்டு ‘ அகிம்சா ஆட்சியின் அழகினைப் பார் ‘ என்று எழுதியிருந்தார் !
காந்தியார் சாந்தியடைய என்ற நூலில் அப்படி என்னதான் எழுதியிருந்தார் – ஏ.வி.பி. ஆசைத்தம்பி ?
* அகிம்சையின் சின்னம் !
ஆண்மையின் சிகரம் !
இந்தியாவின் ஜோதி !
ஈடற்ற மாணிக்கம் ! …என்று மகாத்மா காந்தியை புகழ்ந்து எழுதி, அவரது புகழை வியந்து பாராட்டி ….’ ஒரு புத்தி கெட்ட புல்லறிவாளனின் செய்கையால் செத்து விட்டது, பொசுக்கப் பட்டது, பலியாக்கப் பட்டது என்று காந்தியின் படுகொலையை பதை பதைக்க விவரித்து எழுதியிருந்தார் !
* இதன் காரணமாகவா ஆசைத்தம்பிக்கு சிறைத் தண்டனை ? நிர்வாணப்படுத்தினார்கள் ?
மொட்டை அடித்தார்கள் ?
இல்லை.. இல்லை.. காந்தியை கொன்றவன் வினாயக் கோட்சே என்ற மராத்திய பார்ப்பனன் என்ற உண்மையை சொன்னதாலும் பார்ப்பனர்களின் விஷப் புத்தியையும் விஷமமான யுக்தியையும் கடுமையாக விமர்சனம் செய்து எழுதியதாலும் பெரியாரை எதுவும் செய்ய முடியாத அன்றைய பார்ப்பனீயம், வாலிபப் பெரியாரை வதைத்தார்கள் என்று தான் உணர முடிகிறது !
* ” சாதி, மத, பேதமில்லாத காலத்திலே மதத்தைப் புகுத்தி, மக்களிடம் பூசலைக் கிளப்பி, ஒற்றுமையைச் சிதைத்து, சீரழிய வைத்த வர்க்கம் – இந்த கொடூரன் கோட்சையைச் சேர்ந்த பார்ப்பனர்கள் தான் ! ” …என்று நீண்டதொரு விளக்கத்தை தந்துள்ளார்.
* ” சத்திய சுந்தரரைச் சாகடித்த சண்டாளனைப் பாருங்கள் !
அவன் சாதியில் உதித்த சதிகாரர்களைப் பாருங்கள் ! ஆராய்ச்சி செய்யுங்கள் ; துரோக எண்ணிக்கையின் அகராதி திரட்டுங்கள்; அப்போது உங்கள் அறிவு சரியாக வேலை செய்தால் ………உங்களுக்கு நிச்சயம் விளங்கும் – பார்ப்பனர்களிடத்தில் பாம்பை விட விஷமிருக்கும் தன்மை !
இதை மாத்திரம் நீங்கள் உணர்ந்து விட்டால், துடி துடித்து ஓடி வருவீர்கள்..ஈரோட்டுப் பாதையை நோக்கி ! ” ……..
* இப்படி விரிவாகச் சொன்னவர் தந்தை பெரியார் அல்ல …..வாலிபப் பெரியார் !
அவர் வலிமை மிக்க பெரியார் ஆசைத்தம்பி !
*. இது போன்று ‘ தனி அரசு ‘ இதழில் வெளியான கட்டுரைகள், சட்டமன்றத்தில் பேசியது, நாடாளுமன்றத்தில் உரையாற்றியது என்று ஆசைத்தம்பியின் சிந்தனைகளை அறிந்து கொள்ள பெரிதும் உதவும் நூல் !
* நூலாசிரியர் செ. அருள் செல்வனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் ! திராவிட இயக்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் கட்டாயம் படித்தறிய வேண்டிய ஆவண நூல் !
வாலிபப் பெரியார் ஏ.வி.பி. ஆசைத்தம்பி வாழ்க்கை வரலாறு – செ. அருள் செல்வன் – டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ் – முதல் பதிப்பு 2024 – பக்கங்கள் 572 – விலை ரூ 660/
பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்