வின் வின்ட் பவர் எனர்ஜி என்ற காற்றாலை தயாரிக்கும் நிறுவனம் சென்னையில் மயிலாப்பூரில் செயல்பட்டு வருகிறது. பின்லாந்த் நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த நிறுவனம் வருமானத்தை மறைத்து வருமான வரி கணக்கு காண்பித்ததாக புகார்கள் எழுந்தன. இதே போல, செங்கல்பட்டு மாவட்டம், பூந்தமல்லியில் உள்ள பவர் சென்டர், நுங்கம்பாக்கத்தில் உள்ள கோ கலர்ஸ் நிறுவனம், தேனாம்பேட்டையில் உள்ள சைதன்யா டவர்ஸ் ஆகிய நிறுவனங்களிலும் வருமானத்தை மறைத்து வருமான வரி கணக்கு காண்பித்ததாக புகார்கள் எழுந்தன.
அந்த புகார்களின் அடிப்படையில், இன்று (அக்டோபர் 7) நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமானத் துறை அலுவலகத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட கார்களில் 50- க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட 5 நிறுவனங்களுக்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது இன்று காலை 10 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்று கொண்டிருக்கிறது. இதே போல, சென்னை ஆர். ஏ. புரத்தில் உள்ள கோ கலர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டிலும் சுமார் 10 வருமானவரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.