முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? – அண்ணாமலை கேள்வி!

Estimated read time 1 min read

முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது என்று பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

தமிழகப் பள்ளி மாணவர்கள் இடைநிற்றல் சதவீதம், கடந்த ஆண்டுகளை விட மிகவும் அதிகரித்திருப்பதாக, மத்திய கல்வித் துறை அமைச்சகம் UDISE+ அறிக்கை வெளியிட்டுள்ளது.

கல்வித்துறையில் தமிழகத்தை மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளியுள்ளது இந்த திமுக அரசு. 2020-21ல் தொடக்கப்பள்ளிகளில் 0.6 சதவிகிதமாக இருந்த இடைநிற்றல் விகிதம் இன்று 2024-25ல் 2.7 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

அதுபோல, உயர்நிலைப் பள்ளிகளில் 6.4 சதவிகிதத்திலிருந்து 8.5 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தனியார் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்கும் மும்மொழிக் கல்வி உள்ளிட்ட வாய்ப்புகள், ஏழை, எளிய அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் எங்கும் நடைபெறாத மாணவர்களிடையேயான ஜாதிய மோதல்கள், தமிழக அரசுப் பள்ளிகளில் மட்டுமே நடக்கின்றன. கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டம் உட்பட, பல மாவட்டங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில், கட்டிடமே இல்லாமல் மரத்தடியில் வகுப்புகள் நடத்துவதும், திமுக கட்சிக்காரர்கள் கட்டும் தரமற்ற பள்ளிக் கட்டிடங்கள் இடிந்து விழுவதும், அரசுப் பள்ளிகளை அவல நிலையில் தள்ளியிருக்கின்றன என்று அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர, முதலமைச்சர் ஸ்டாலின் அரசின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காக, அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை விடும் கொடுமையும், திமுக ஆட்சியில்தான் நடந்தேறுகிறது. மேலும், தமிழகத்தில் 3,671 பள்ளிகளில், ஒரு ஆசிரியர் மட்டுமே பணியிலிருக்கிறார்.

இதே காலகட்டத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை, ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் எண்ணிக்கை 2.39 லட்சமாக இருக்கையில், தனியார் பள்ளிகளில் கிட்டத்தட்ட இரண்டு மடங்காக, 5.26 லட்சம் மாணவர்கள் சேர்கின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வித் துறை நிலைமை இப்படி இருக்க, வீண் விளம்பரம் செய்து, தங்களுக்குத் தாங்களே பாராட்டு விழா நடத்தி நாட்களைக் கடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் எப்போது விழித்து கொள்வார்கள்? என்று அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author