எஸ்.ஐ.ஆர் மூலம் வட மாநிலத்தவருக்கு இங்கு வாக்குரிமை அளித்தால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் தே.மு.தி.க வின் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே கோவை நெடுஞ்சாலையில் சற்று தூரம் நடந்து வந்த பிரேமலதா விஜயகாந்த் பின்னர் தனது பிரசார வாகனத்தில் ஏறி அங்கு கூடியிருந்த தேமுதிகவினர் மற்றும் பொது மக்களிடையே உரையாற்றினார்.
கூட்டத்தில் அவர் பேசியதாவது, “நாங்கள் மக்களை சந்திக்க வந்தால் கொடி கட்டாதே, பேனர் வைக்காதே என கட்டுபாடு விதிப்பவர்கள் தற்போது கூட்டத்தினுள் இரண்டு ஆம்புலன்ஸ்களை விடுகின்றனர், கோவையில் ஆளுங்கட்சியினர் கூட்டம் நடத்தினால் எந்த கட்டுப்பாடும் இல்லை, இதையெல்லாம் கடந்து வந்தவர்கள் நாங்கள், எஸ்.ஐ.ஆர் படிவத்தை அனைவரும் சரியாக பதிவு செய்ய வேண்டும், இதன் மூலம் இங்குள்ள வட மாநிலத்தவருக்கு வாக்குரிமை அளிக்க முயன்றால் தமிழகத்தில் மக்கள் புரட்சி வெடிக்கும், அடுத்த சட்டமன்ற தேர்தல் முடிவு கூட்டணி ஆட்சி அமையும் வகையில் இருக்கும்” என்றார்.
