
தமிழ்நாடு முழுவதும் உள்ள 590 சார் பதிவாளர் அலுவலகங்களில் சொத்துப் பரிமாற்றம், திருமணப் பதிவு, உயில் உள்ளிட்ட ஆவணங்களைப் பதிவு செய்ய மக்கள் காத்திருக்க வேண்டிய சூழலைத் தவிர்க்கும் வகையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் பதிவுத்துறையில் பல்வேறு டிஜிட்டல் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, மக்களுக்குப் பத்திரப்பதிவுச் சேவைகளை விரைவாகவும், இருந்த இடத்திலேயே கிடைக்கவும் வழிவகை செய்யும் விதமாக, ‘ஸ்டார் 3.0’ என்ற புதிய திட்டத்தைப் பதிவுத்துறை உருவாக்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலமாகப் புதிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், மனைப் பிரிவுகளை வாங்குபவர்கள் மற்றும் விற்பவர்கள் வீட்டில் இருந்தபடியே பத்திரப்பதிவைச் செய்து கொள்ளலாம்.
இந்தச் சேவைக்கான புதிய மென்பொருளில் சொத்து வாங்குபவர், விற்பவர் மற்றும் சொத்து விவரங்களைப் பதிவேற்றம் செய்தால், மென்பொருளே தானாகப் பத்திரங்களை உருவாக்கிவிடும். தொடர்ந்து ஆதார் எண் மூலம் ஓ.டி.பி. பதிவு செய்தல் மற்றும் ரூ.1,500-க்குக் கிடைக்கும் விரல் ரேகைப் பதிவு இயந்திரம் மூலம் கைரேகை பதிவு செய்தால், அதிகபட்சமாக 10 நிமிடங்களில் பத்திரப்பதிவுக்கான ஆவணங்கள் கையில் கிடைத்துவிடும். இதன் மூலம் மக்கள் அலைய வேண்டிய நிலை இருக்காது.
மேலும், பதிவு செய்த ஆவணங்களின் சான்றிட்ட நகலைப் பெற இப்போதுள்ள நடைமுறையில் 2 நாட்கள் முதல் ஒரு வாரம் வரை ஆகும் காலதாமதத்தைத் தவிர்க்கும் விதமாக, ‘சிஸ்டம் ஜெனரேட்டர் சிக்னேச்சர்’ என்ற சீர்திருத்தம் கொண்டுவரப்படுகிறது. இதன் மூலம் பதிவு செய்த அடுத்த நிமிடமே ஆவணங்களின் நகல் கிடைக்கும்.
இதுமட்டுமின்றி, குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கப் பதிவு மற்றும் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளைப் பதிவு செய்வதற்கும் அந்தந்த இடங்களிலேயே முடித்து ஒப்புதல் பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சேவைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் மக்கள் பயன்பாட்டுக்குத் தொடங்கி வைக்கவுள்ளார்.
