சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு விவகாரத்துக்கான அரசுத் தலைவரின் உதவியாளர் ஜேக் சல்லிவனுடன் ஆகஸ்டு 29ஆம் நாள் பிற்பகல் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் சந்திப்பு நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சிக்கலான சர்வதேச நிலைமையில், பல்வேறு நாடுகள் ஒற்றுமையுடன் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள வேண்டும். பெரிய நாடான சீனாவும் அமெரிக்காவும், வரலாறு, மக்கள் மற்றும் உலகத்துக்குப் பொறுப்பேற்று, உலக அமைதியைப் பேணிக்காத்து, கூட்டு வளர்ச்சியை முன்னேற்ற வேண்டும் என்றார்.
மேலும், சீன-அமெரிக்க உறவின் சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவது என்ற சீனாவின் இலக்கு மாறாது. ஒன்றுக்கொன்று மதிப்பு, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி ஆகியவற்றின் அடிப்படையில் சீன-அமெரிக்க உறவை அணுகுவது என்ற சீனாவின் கோட்பாடு மாறாது. சொந்த அரசுரிமை, பாதுகாப்பு, வளர்ச்சி நலன்களை உறுதியுடன் பேணிக்காப்பது என்ற சீனாவின் நிலைப்பாடு மாறாது.
சீன-அமெரிக்கப் பாரம்பரிய நட்புறவைத் தொடர்ச்சியாக முன்னேற்றுவது என்ற சீனாவின் முயற்சி மாறாது என்றும் ஷி ச்சின்பிங் தெரிவித்தார்.
அமெரிக்கா, சீனாவுடன் இணைந்து செயல்பட்டு, ஆக்கப்பூர்வ மனப்பாங்குடன் சீனா மற்றும் சீன வளர்ச்சியை அணுகி, இரு நாட்டுறவின் வளர்ச்சிக்கான சரியான வழிமுறையைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.