திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிளாட்டினம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், சுரங்க பணிகளை அனுமதிப்பதில் முடிவெடுக்க முடியாமல் தமிழக அரசு திணறி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அதிக விலை மதிப்புள்ள கனிமங்கள் உள்ள நிலையில், கனிமங்களை சுரங்கம் அமைத்து எடுப்பதற்கான அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் பிளாட்டினம் மற்றும் அது சார்ந்த கனிம படிவங்கள் இருப்பதை மத்திய புவியியல் ஆய்வு நிறுவனம் கண்டறிந்துள்ளது.
இது தொடர்பான விரிவான அறிக்கையை 2016ல் தமிழக அரசுக்கு மத்திய புவியியல் ஆய்வு நிறுவனம் அளித்துள்ளதாகவும், பிளாட்டினம் எடுக்கச் சுரங்கங்களை அனுமதிப்பதில் முடிவெடுக்க முடியாமல் மாநில அரசு திணறி வருவதாகவும் கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிக விலை மதிப்பு மிக்க கனிமங்களை எடுக்கவும், சுரங்கப் பணிகளை அனுமதிப்பதில்லும் தெளிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
மேலும், சுரங்க பணிகள் தொடர்பாக நிர்வாக ரீதியான பணிகள் நடந்து வருவதால் விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
