சீன-இந்தியத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும், இந்திய அரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மையரும் ஏப்ரல் ஒன்றாம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினர்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், சீனா மற்றும் இந்தியா, பெரும் வளரும் நாடுகளாகவும், உலகத்தின் தென் பகுதியிலுள்ள முக்கிய நாடுகளாகவும் திகழ்கின்றன. தத்தமது நவீனமயமாக்க கட்டுமானத்தின் முக்கிய கட்டத்தில் உள்ளன. இரு தரப்பும், தொலைநோக்கு பார்வையுடன் இரு நாட்டுறவை கையாண்டு, பரஸ்பர நம்பிக்கை மற்றும் நலன் தரும் கூட்டு வளர்ச்சி வழிமுறையை நாடி, உலக பலதுருவமயமாக்கம் மற்றும் சர்வதேச உறவின் ஜனநாயகமயமாக்கத்தைக் கூட்டாக முன்னேற்ற வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
மேலும், அரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மையருடன் இணைந்து, இரு நாடுகளுக்கிடையிலான ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை அதிகரித்து, பல்வேறு துறைகளிலுள்ள பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, முக்கிய சர்வதேச விவகாரங்களில் தொடர்புகளை ஆழமாக்கி, சீன-இந்திய எல்லை பகுதியின் அமைதியைக் கூட்டாகப் பேணிக்காத்து, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்றி, உலக அமைதி மற்றும் செழுமையை முன்னேற்றுவதற்குப் பங்காற்ற விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
முர்மு கூறுகையில், நிலைப்புத்தன்மை கொண்ட இரு தரப்புறவு இரு நாடுகள் மற்றும் உலகத்துக்கு நலன் தரும். சீன-இந்தியத் தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவை வாய்ப்பாக கொண்டு, இரு நாட்டுறவின் சீரான வளர்ச்சியைக் கூட்டாக முன்னேற்றுவோம் என்றார்.
அதேநாள், சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துச் செய்தி அனுப்பினர். லீ ச்சியாங் கூறுகையில், இந்தியாவுடன் இணைந்து, பல்வேறு துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை முன்னேற்றி, எல்லை பிரச்சினையை உகந்த முறையில் கையாண்டு, இரு நாட்டுறவின் நிதானமான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக தெரிவித்தார்.
