வாஷிங்டன் : ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான போண்டி கடற்கரை பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர், 25 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் யூத எதிர்ப்பு (antisemitic) பயங்கரவாதத் தாக்குதலாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட இருவரில் ஒருவர் (தந்தை சஜித் அக்ரம், 50) சம்பவ இடத்திலேயே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் (மகன் நவீத் அக்ரம், 24) படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இஸ்லாமிக் ஸ்டேட் (ISIS) அமைப்பால் ஊக்குவிக்கப்பட்ட தாக்குதல் என்று ஆஸ்திரேலிய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் இஸ்லாமிக் ஸ்டேட் கொடிகள் கண்டெடுக்கப்பட்டதால், இது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையது என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் தெரிவித்தார். போலீஸ் கமிஷனர் மால் லான்யன், நவீத் அக்ரம் கோமா நிலையில் இருந்து மீண்டு வந்ததால், அவரை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், மருத்துவ அனுமதி கிடைத்தவுடன் புதன்கிழமை குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என்றும் கூறினார்.
இந்தச் சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகையில் ஹனுக்கா (யூத பண்டிகை) கொண்டாட்டத்தின் போது இந்தத் தாக்குதலை குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்தார். “ஆஸ்திரேலிய மக்களுக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் எனது அன்பும் பிரார்த்தனையும். இது பயங்கரமான யூத எதிர்ப்பு பயங்கரவாதத் தாக்குதல்” என்று கூறிய டிரம்ப், “உலக நாடுகள் அனைத்தும் ராடிகல் இஸ்லாமிக் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
யூத சமூகத்துக்கு அமெரிக்கா எப்போதும் ஆதரவாக இருக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.தாக்குதல் நடந்த போண்டி கடற்கரை, சிட்னியின் பிரபலமான சுற்றுலாத் தலம். இந்தச் சம்பவம் யூத எதிர்ப்பு உணர்வுகளால் தூண்டப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியா முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அல்பனீஸ், “இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல, தீவிரவாத அமைப்பின் ஊக்குவிப்பு” என்று கூறினார்.
உலகத் தலைவர்கள் பலரும் ஆஸ்திரேலியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.இந்தத் தாக்குதல், உலகளவில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்வதை மீண்டும் நினைவூட்டியுள்ளது. டிரம்பின் கருத்து, உலக நாடுகள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற செய்தியை வலியுறுத்தியுள்ளது.
