இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த சில ஆண்டுகளாகவே காயத்தால் பெரிய பின்னடைவை சந்தித்து வருகிறார். ஆனாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து இந்திய அணியில் விளையாட வேண்டும் என்ற நோக்குடன் தொடர்ச்சியாக தனது உழைப்பை போட்டு வருகின்றார். ஏற்கனவே கடைசியாக மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடியிருந்த அவர் அதன் பின்னர் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறினார்.
மீண்டும் இந்திய அணிக்கு கம்பேக் கொடுக்கும் முகமது ஷமி :
பின்னர் 10 மாதங்களாகியும் இதுவரை இந்திய அணிக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார். தற்போது 35 வயது எட்டியுள்ள அவரின் வயதை காரணம் காட்டியும், அவரது காயத்தை காரணம் காட்டியும் இந்திய அணி அவரை புறக்கணித்து இளம் வீரர்களின் பக்கம் சென்றது.
ஆனாலும் மிகச் சிறப்பான வேகப்பந்து வீச்சாளரான அவரால் இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட முடியும் என்கிற ஆதரவு பல்வேறு முன்னாள் வீரர்கள் மத்தியில் இருந்தும் குவிந்தது. அதோடு உள்ளூர் போட்டிகளிலும் முகமது ஷமி முழு உடற்தகுதியுடன் மிகச் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வேட்டை நடத்தி வருவதால் அவரை அணிக்குள் சேர்க்க வேண்டும் என்றும் சிலர் கருத்துக்களை தெரிவித்து வந்திருந்தனர்.
இந்நிலையில் முகமது ஷமி மீண்டும் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் வெளியான தகவலின் படி : இந்திய அணியின் நிர்வாகம் முகமது ஷமி விவகாரத்தில் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் இருந்து வருவதாகவும் அவர் அணியை விட்டு முழுமையாக விலக்கப்படவில்லை என்றும் முடிவு செய்துள்ளது.
அதோடு அவரது உடற்தகுதியை மட்டுமே நாங்கள் கவனத்தில் கொண்டு வருகிறோம் என்றும் அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர் அணிக்கு தேவை என்றும் 2027 உலக கோப்பையை கருத்தில் கொண்டும் நியூசிலாந்து தொடரில் அவரை விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதன் காரணமாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான அணி ஜனவரி 3-ஆம் தேதி அல்லது 4-ஆம் தேதி அறிவிக்கப்படும்போது நிச்சயம் முகமது ஷமியின் பெயரும் இடம் பெற்று அவர் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று அந்த தகவல்கள் கூறுகின்றன.
