ஈரான்-அமெரிக்கா இடையேயான போர் பதற்றங்களுக்கு நடுவே, சீனாவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த நேரடி மிரட்டல் சர்வதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானுக்கு சீனா உதவுவதாகக் குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்க சீனா உதவ வேண்டும் என்று கோரினார்.
ஆனால், ஈரான் விவகாரத்தில் தலையிட வேண்டாம் என சீனா அமெரிக்காவை எச்சரித்துள்ளதுடன், போரில் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்க மறுத்துவிட்டது. இதனால் கோபமடைந்த டிரம்ப், சீனா ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கினால் சீனப் பொருட்கள் மீது 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று மிரட்டியுள்ளார்.
மேலும், சீனா தனது நிபந்தனைகளுக்குப் பணியவில்லை என்றால், மே மாதம் திட்டமிடப்பட்டுள்ள தனது சீனப் பயணத்தை ரத்து செய்யப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ரஷ்யா ஒரு தந்திரமான காய்நகர்த்தலை மேற்கொண்டுள்ளது. டொனால்ட் டிரம்ப் சீனா செல்வதற்குச் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பே, ஏப்ரல் 14-15 தேதிகளில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பெய்ஜிங்கிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது டிரம்பின் செல்வாக்கைக் குறைக்கும் ரஷ்யாவின் திட்டமிட்ட நடவடிக்கை என்று நிபுணர்கள் கருதுகின்றனர். அமெரிக்கா ஒருபுறம் வரியை உயர்த்தி மிரட்டினாலும், ரஷ்யாவின் இந்தத் தலையீடு டிரம்பிற்கு ஒரு பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது. இதன் மூலம், வல்லரசு நாடுகளுக்கு இடையேயான மோதல் தற்போது ஆசிய அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
