இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக பதவி உயர்வு பெற்று அந்த தொடரில் பங்கேற்றார். கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமான பார்மை அவர் வெளிப்படுத்திவதால் அவருக்கு இந்த துணை கேப்டன் வாய்ப்பு வழங்கப்பட்டது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் டெஸ்ட் போட்டிகளை பொருத்தவரை மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் அவர் இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் தனது அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். அதிலும் குறிப்பாக ஒரே டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து பல்வேறு சாதனைகளை அவர் இங்கிலாந்து மண்ணில் நிகழ்த்தியிருந்தார்.
இங்கிலாந்து தொடரில் அற்புதமான பார்மில் இருந்த அவருக்கு நான்காவது டெஸ்ட் போட்டியின் போது காயம் ஏற்பட்டது. இங்கிலாந்து வீரர் கிறிஸ் வோக்ஸ் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் செய்ய ஆசைப்பட்ட ரிஷப் பண்ட் அந்த பந்தை சரியாக கணிக்க தவறவிட்டதால் அந்த பந்து பட்டு தனது கால் பகுதியில் காயம் அடைந்தார்.
பின்னர் அவருக்கு செய்யப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் கால் பாதத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டதால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறி அந்த காயத்திற்கான அறுவை சிகிச்சையும் மேற்கொண்டார். அவருடைய அந்த காயம் சரியாக இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதனால் தற்போது அவர் முழு ஓய்வில் இருந்து வருகிறார்.
இந்த காயம் காரணமாக அவர் 2025-ஆம் ஆண்டிற்கான ஆசிய கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2024 டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக செயல்பட்டிருந்த அவர் டி20 உலகக்கோப்பையை வென்ற அணியிலும் முக்கிய பங்கினை வகித்திருந்தார்.
2025 ஆசிய கோப்பை தொடரிலும் சரி, அடுத்த 2026 டி20 உலக கோப்பையிலும் சரி விக்கெட் கீப்பராக நிச்சயம் இந்திய அணியில் இடம்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இங்கிலாந்து தொடரில் அடைந்த காயத்தால் இந்த வாய்ப்பை தவறவிட்டார். அதுமட்டும் இன்றி எதிர்வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும் அவரால் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.