வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்துள்ளதை “சர்வதேச சட்டங்களை மீறும் அராஜக செயல்” எனச் சீனா கடுமையாகச் சாடியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் சீனாவுக்குக் கிடைக்க வேண்டிய எண்ணெய் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் மீது வெளிப்படையாக ராணுவத்தைப் பயன்படுத்துவதும், அந்த நாட்டு அதிபரை அராஜகமாகப் பிடிப்பதும் சர்வதேசச் சட்டங்களை படுமோசமாக மீறும் செயலாகும். அமெரிக்காவின் இந்த அதிரடித் தாக்குதல் சீனாவிற்குப் பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஐநா சபையின் அடிப்படை விதிகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், லத்தீன் அமெரிக்க பிராந்தியத்தின் அமைதிக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும்.”
குறிப்பிடத்தக்க விஷயமாக, அதிபர் மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்புதான், அவர் சீனாவின் சிறப்புத் தூதரைச் சந்தித்துப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெனிசுலாவின் எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்ற அதிபர் டிரம்பின் அறிவிப்பு சீனாவுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னணி இதோ: வெனிசுலாவிடம் 303 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய் இருப்பு உள்ளது. இது சவுதி அரேபியாவை விட அதிகம். வெனிசுலாவின் மொத்த ஏற்றுமதியில் 80 சதவீதத்தை (தினமும் 6.13 லட்சம் பீப்பாய்கள்) சீனா தான் வாங்கி வருகிறது. வெனிசுலாவின் கனரக கச்சா எண்ணெய் சீன சுத்திகரிப்பு நிலையங்களுக்கு மிகவும் மதிப்புமிக்கது மற்றும் குறைந்த விலையில் கிடைப்பதாகும். சீனாவிடம் வெனிசுலா வாங்கிய சுமார் 60 பில்லியன் டாலர் கடனை, எண்ணெய்க்கு ஈடாகவே திருப்பிச் செலுத்தி வருகிறது.
வெனிசுலாவில் நிலவும் அரசியல் ஸ்திரத்தன்மை சீனாவின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது. தற்போது அமெரிக்கா அந்த நாட்டு எண்ணெய் வளத்தைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதால், சீனாவுக்கு வர வேண்டிய எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படலாம் அல்லது அதன் விலை அதிகரிக்கப்படலாம் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த அதிரடி நடவடிக்கையால், லத்தீன் அமெரிக்காவில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்ற சீனாவிற்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் அரசியல் மோதல் மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
