தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை முன்னிட்டு, என்.டி.ஏ கூட்டணியை உறுதிப்படுத்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான பா.ஜ.க குழுவினர் சென்னையில் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமை மதுராந்தகத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அதற்குள் தொகுதிப் பங்கீட்டை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், டிடிவி தினகரனின் அ.ம.மு.க அதிகாரப்பூர்வமாக பா.ஜ.க கூட்டணியில் இணைந்துள்ளது.
அதேசமயம், ஓ.பி.எஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் தி.மு.க-வில் இணைந்தது ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
தொகுதிப் பங்கீட்டைப் பொறுத்தவரை, பா.ஜ.க சுமார் 30 இடங்களிலும், அ.ம.மு.க 7 முதல் 12 இடங்களிலும் போட்டியிட வாய்ப்புள்ளது. பா.ம.க-விற்கு 18 இடங்கள் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், ராமதாஸ் இன்னும் தனது முடிவை அறிவிக்கவில்லை; அவர் தி.மு.க அல்லது தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைப்பது குறித்தும் ஆலோசித்து வருகிறார்.
மேலும், அண்ணாமலை மேற்கு தமிழகத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், செல்வாக்கு குறைந்து வரும் ஓ.பி.எஸ் அணிக்கு அதிகபட்சமாக 3 இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படலாம் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
