தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் கோவையின் கணபதி பகுதியில் கஞ்சா போதையில் இருந்த ஒரு கும்பல், இளைஞர் ஒருவரை மிகக் கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் சரியான நேரத்தில் தலையிடவில்லை என்றால் அந்த இளைஞர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோவைப் பகிர்ந்து “கஞ்சா மாடல் தி.மு.க” ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கவலைக்கிடமாக உள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.
இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் ஏதோ ஓரிடத்தில் மட்டும் நடப்பவை அல்ல என்றும், திருத்தணி, சென்னை வேளச்சேரி என மாநிலம் முழுவதும் தொடர்ச்சியாக அரங்கேறி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தி.மு.க-வினருக்கும் போதைப் பொருள் கடத்தலுக்கும் தொடர்பு இருப்பதாக மீண்டும் மீண்டும் அம்பலமாகி வருவதால்தான், இந்த கஞ்சா வலைப்பின்னலைத் தடுக்க முடியாமல் வன்முறை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருக்கிறது என்று அண்ணாமலை தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமாக விமர்சித்துள்ளார்.
