தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், கூட்டணிக் குறித்தப் பேச்சுவார்த்தைகள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தொடர்ந்து பேரம் பேசி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தனது மகன் விஜய பிரபாகரனுக்கு விருதுநகர் தொகுதி, மாநிலங்களவை பதவி மற்றும் 20 சட்டமன்றத் தொகுதிகள் எனப் பல நிபந்தனைகளை அவர் முன்வைத்துள்ளார். இந்தப் பேரம் படிந்து வராததால், தற்போது தேமுதிக இக்கட்டான சூழலில் தவிப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தொடக்கத்தில் தேமுதிகவை இணைத்துக் கொள்ள திமுக தரப்பில் ஆர்வம் காட்டப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, சில சலுகைகளும் வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டன. இருப்பினும், பிரேமலதா விஜயகாந்த் ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, மறுபுறம் திமுக அரசின் சட்டம் ஒழுங்கு குறித்துக் கடுமையாக விமர்சனம் செய்து வந்தார்.
இதனால் அதிருப்தியடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், இனிமேல் தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தேவையில்லை என்றும், அவர்களாகத் தேடி வந்தால் மட்டும் பார்க்கலாம் என்றும் கறாராக உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரேமலதாவின் அதிகப்படியான கோரிக்கைகளால் கடும் கோபத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இரு பெரும் கட்சிகளுமே கதவுகளை மூடிவிட்டதால், தற்போது தேமுதிக கூட்டணியின்றித் தனித்து விடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
வரும் பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் தனது இறுதி முடிவை வெளியிடப் பிரேமலதா திட்டமிட்டுள்ளார். அதிகப்படியான பேரம் பேசி இப்போது தேமுதிக இறங்கி வர வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருப்பது அக்கட்சித் தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
