அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு தரிசனக் கட்டண உயர்வுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Estimated read time 0 min read

இந்து அறநிலையத் துறைக்கு, ஆட்சி முடியும் தருவாயில் பக்தர்கள் மீது என்ன திடீர் பாசம்? என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலின் சிறப்பு தரிசனக் கட்டணத்தை ரூ.50 லிருந்து ரூ.100 ஆக உயர்த்தப்போவதாக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு

அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

பணம் படைத்தவர்களும் அதிகாரப் பலம் கொண்டவர்களும் எவ்வித தடையுமின்றி எளிதாக இறைவனை சென்று தரிசிக்கையில், ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மட்டும் எதற்காக நிதிச்சுமை ஏற்றப்படுகிறது? அதுவும் கடந்த நான்கு ஆண்டுகளாக கோவில்களில் கழிவறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல், கூட்ட நெரிசலாலும் கோவில் நிர்வாகக் குளறுபடிகளாலும் பக்தர்கள் அவதிப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்து அறநிலையத் துறைக்கு, ஆட்சி முடியும் தருவாயில் பக்தர்கள் மீது என்ன திடீர் பாசம்? ஒருவேளை கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் திராணியின்றி, கட்டண உயர்வு மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முயற்சிக்கிறதா இந்த இந்துவிரோத அரசு? கோடிகோடியாக கொள்ளையடிக்கும் திமுக தலைவர்களுக்கு வேண்டுமானால் ரூ.50 உயர்வு என்பது அசட்டையான ஒன்றாக இருக்கலாம், ஆனால் நான்கு பேர் கொண்ட ஒரு ஏழைக் குடும்பத்திற்கு தரிசனக் கட்டணம் ரூ. 400 என்பது அவர்களின் ஒரு நாள் ஊதியம்.

எனவே, ஏழை மக்களை வஞ்சிக்கும் இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை நயினார் நாகேந்திரன் வலியுறுத்தி உள்ளார். இல்லையேல் அந்த அண்ணாமலையார் சாட்சியாக தமிழக பாஜக சார்பாக மிகப்பெரும் அறப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author