பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மக்களவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி தமிழக எம்.பி.க்கள் உட்பட பலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல்காந்தி, “கடந்த சில நாட்களாக முடங்கி கிடந்த அமெரிக்க – இந்திய வர்த்தக ஒப்பந்தத்தில் அமெரிக்க அரசின் கடும் அழுத்தம் காரணமாக நேற்றிரவு(பிப்.2) பிரதமர் மோடி கையெழுத்திட்டுள்ளார். நாட்டின் நலனில் பிரதமர் மோடி சமரசம் செய்துவிட்டார். அமெரிக்காவிடம் இந்தியாவை பிரதமர் மோடி விற்றுவிட்டார். எதிர்க்கட்சி தலைவரை கூட நாடாளுமன்றத்தில் பேச விடுவது இல்லை.
தேச பாதுகாப்பு குறித்து நான் பேசுவது பிரதமர் மோடிக்கும், பாதுகாப்பு அமைச்சருக்கும் சங்கடத்தை ஏற்படுத்துகிறது. அப்படி சங்கடம் இல்லை என்றால் என்னை பேச அனுமதித்திருக்க வேண்டும்” என்றார்.
