மணிப்பூர் செல்ல பிரதமருக்கு 2 ஆண்டுகளா?… மாநிலங்களவையில் மல்லிகார்ஜுன கார்கே சரமாரி கேள்வி…!!! 

Estimated read time 1 min read

நாடாளுமன்ற மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் மாநில விவகாரத்தில் மத்திய அரசை மிகக் கடுமையாகச் சாடினார். மணிப்பூரில் இன வன்முறையால் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறியும் தவித்த நிலையில், பிரதமர் மோடி அந்த மாநிலத்திற்குச் செல்ல இரண்டு ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

வரலாற்றுப் பயணங்களான வாஸ்கோடகாமா மற்றும் கொலம்பஸ் ஆகியோரின் பயண காலத்தைவிடவும் மிக அதிக நேரத்தை பிரதமர் மணிப்பூர் விவகாரத்தில் எடுத்துக்கொண்டதாக ஒப்பிட்டுப் பேசிய கார்கே, மணிப்பூரை ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியாக மத்திய அரசு மாற்றியுள்ளதாகவும் தனது உரையில் வேதனை தெரிவித்தார்.

மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அந்த ஆட்சி திரும்பப் பெறப்பட்டு புதிய முதலமைச்சராக ஒய்.கேம்சந்த் சிங் பதவியேற்க உள்ளார்.

இந்தச் சூழலில் கார்கே ஆற்றிய உரையில் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் செயல்பாடுகளைக் கேள்வி எழுப்பினார். கார்கேவின் இந்தப் பேச்சுக்கு ஆளும் தரப்பு உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

மணிப்பூர் மக்களின் துயரத்தைத் துடைப்பதில் மத்திய அரசு உரிய அக்கறை காட்டவில்லை என்று அவர் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author