சென்னை : தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ல் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியை கைப்பற்றியதைத் தொடர்ந்து, புதிய சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா இன்று சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
நேற்று முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட தவெக தலைவர் விஜய், இன்று பெரம்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். முதலமைச்சராக பதவியேற்கும் போது “ஆண்டவன் மீது ஆணையாக…” என சத்தியம் செய்த விஜய், இன்று சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கும் போது “உளமாற உறுதி கூறுகிறேன்…” எனக் கூறினார்.
இன்றைய பதவியேற்பு விழாவில் முதலில் முதலமைச்சர் விஜய் பதவியேற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதன் பின்னர், சட்டசபை கட்சித் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலின் (தி.மு.க.), எடப்பாடி பழனிசாமி (அ.தி.மு.க.), முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் (திமுக) உள்ளிட்டோர் பதவியேற்றனர்.
முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா உள்ளிட்ட முக்கிய பிரமுக்களும் பதவியேற்றுக்கொண்டனர்.இதைத் தொடர்ந்து, தமிழ் அகர வரிசைப்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக்கொண்டனர். தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்ட கருப்பையா, பதவியேற்புக்கு முன் தனது உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.
