தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்து தெரிவிக்க, கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர் 650 கிலோமீட்டர் தூரப் பாதயாத்திரையை மேற்கொண்டுள்ளனர்.
கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த தொழில்முறை மூழ்காளர் (Diver) கே.எஸ். முகமது ரபி மற்றும் அவரது மனைவி உமு ஷஹனமோல் ஆகியோர் தீவிர விஜய் ரசிகர்கள். தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 2026 சட்டப்பேரவைத் தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) 108 இடங்களைப் பிடித்து ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அவருக்கு நேரில் வாழ்த்து சொல்ல இந்தத் தம்பதி முடிவெடுத்துள்ளனர்.
கடந்த மே 7-ஆம் தேதி மலப்புரத்தில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கிய இந்தத் தம்பதி, கூடாரம் (Tent), பேக் பேக் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுடன் சென்னை நோக்கி நடந்து வருகின்றனர். பாலக்காடு வழியாகத் தமிழக எல்லைக்குள் நுழைந்து, அங்கிருந்து சென்னைக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளனர். தற்போது அவர்கள் பாலக்காடு அருகே உள்ள பரலி பகுதியை அடைந்துள்ளனர்.
வெப்பம், மழை எனப் பாராமல் இவர்கள் மேற்கொள்ளும் இந்தப் பயணம் தொடர்பான வீடியோக்கள் யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன. முதல்வரைச் சந்திப்பதற்கான அனுமதி இன்னும் உறுதி செய்யப்படாத நிலையிலும், “எங்கள் விடாமுயற்சி எங்களை அவரிடம் கொண்டு சேர்க்கும்” என நம்பிக்கையுடன் நடக்கின்றனர் இந்தத் தம்பதியினர்.
