மத்திய அரசு ரேஷன் கடைகளில் சீர்திருத்தத்தைக் கொண்டுவர, ‘இ-ரூபி’ (e-RUPI) என்ற டிஜிட்டல் வவுச்சர் முறையைச் சோதனை அடிப்படையில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
, இதன்படி, பயனாளிகளுக்குப் பொருட்களுக்குப் பதிலாக, குறிப்பிட்ட உணவுப் பொருட்களை வாங்குவதற்கான டிஜிட்டல் கூப்பன்கள் (QR code அல்லது SMS) அவர்களது மொபைலுக்கு அனுப்பப்படும். இந்தக் கூப்பன்களைக் கொண்டு தங்களுக்கு விருப்பமான நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
தற்போது சண்டிகர், புதுச்சேரி மற்றும் குஜராத்தின் சில மாவட்டங்களில் இந்த முன்னோடித் திட்டம் (Pilot Project) தொடங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம், ரேஷன் விநியோகத்தில் நடக்கும் முறைகேடுகளைத் தடுத்து, தகுதியானவர்களுக்குப் பொருட்கள் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்வதாகும். இது நேரடியாகப் பணமாக வழங்கப்படாமல், “புரோகிராமபில்” (Programmable) பணமாக இருப்பதால், இந்த வவுச்சர்களைக் கொண்டு ரேஷன் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க முடியும். இருப்பினும், சண்டிகர் மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளில் ஏற்கனவே பணப் பரிமாற்ற முறை (DBT) அமலில் உள்ளதால், அங்குக் கூடுதல் வசதிகள் வழங்கப்படலாம்.
இந்தத் திட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தால், ரேஷன் கார்டுதாரர்கள் தங்களுக்குத் தேவையான தரமான பொருட்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளும் சுதந்திரம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
