இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான அனுராக் தாக்கூர் மீதான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த 2017 ஆம் ஆண்டு லோதா கமிட்டியின் பரிந்துரைகளை அமல்படுத்துவதில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, கிரிக்கெட் வாரியத்தின் எந்தவொரு செயல்பாட்டிலும் அவர் பங்கேற்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் தடை விதித்திருந்தது.
சுமார் 9 ஆண்டுகளாக அமலில் இருந்த இந்தத் தடையை நீக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தத் தடை வாழ்நாள் முழுவதற்கும் பொருந்தாது என்று கூறி தற்போது அவருக்குப் பெரிய நிம்மதியை அளித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பின் மூலம், அனுராக் தாக்கூர் மீண்டும் கிரிக்கெட் வாரியக் கூட்டங்கள் மற்றும் இதர அலுவல் ரீதியான பணிகளில் முறைப்படி பங்கேற்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஒன்பது ஆண்டுகள் அவர் கிரிக்கெட் நிர்வாகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டதே போதுமான தண்டனை என்றும், அவர் ஏற்கனவே நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதை ஏற்றுக்கொள்வதாகவும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய அமைச்சராகவும் இருந்த அனுராக் தாக்கூர், மீண்டும் கிரிக்கெட் நிர்வாகத் துறையில் நுழைய அனுமதி கிடைத்துள்ளதால் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் எதிர்காலத் திட்டங்களில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
