2026ஆம் ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 28ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் அமெரிக்கா–இந்திய வர்த்தக ஒப்பந்தம் மற்றும் முன்னாள் ராணுவ தளபதி நரவணேவின் புத்தகம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து கேள்வி எழுப்பினார்.
இதனால் கடந்த சில தினங்களாக மக்களவை முழுமையாக முடங்கிய நிலை நீடித்தது.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி பதிலுரை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிப்ரவரி 4ஆம் தேதி மக்களவையில் பிரதமர் வரவில்லை. தீர்மானம் பிரதமர் இல்லாமலேயே நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
எதிர்க்கட்சி பெண் எம்பிக்கள் பிரதமரை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதனால் தான் பிரதமரை அவைக்கு வர வேண்டாம் என்று தான் கேட்டுக்கொண்டதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.மாநிலங்களவையில் இன்று (பிப்ரவரி 5) குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பிரதமர் மோடி உரையாற்றினார். பேசத் தொடங்கியதுமே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டனர். “ராகுல் காந்தியை பேச அனுமதியுங்கள்” என்று அவர்கள் கோஷமிட்டனர். “நான் பேசுவதை கேளுங்கள், என்னை பேச அனுமதியுங்கள்” என்று பிரதமர் மோடி கோரிக்கை வைத்தார்.
ஆனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவரது உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.பிரதமர் மோடி தனது உரையில், தேச நலன் மற்றும் அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் குடியரசுத் தலைவர் உரையில் உள்ளன என்று கூறினார். “இந்த நூற்றாண்டின் 2ஆவது காலாண்டு இந்தியாவுடையதாக இருக்கும்” என்றும், உலக நாடுகளின் பிரச்சினைகளை தீர்க்கும் வலிமைமிக்க நாடாக இந்தியா விளங்குகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
2014இல் உலக பொருளாதாரத்தில் 11ஆவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது 3ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது என்றும் பிரதமர் பெருமிதம் தெரிவித்தார்.ஒட்டுமொத்தமாக, இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கம் மற்றும் பிரதமரின் உரை புறக்கணிப்பு ஆகியவை நாடாளுமன்றத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. சபாநாயகரின் பரபரப்பு குற்றச்சாட்டும் எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பும் ஜனநாயக நடைமுறை குறித்து புதிய விவாதத்தை தூண்டியுள்ளது. வரும் நாட்களில் இந்த விவகாரம் மேலும் சூடுபிடிக்கும் என்று அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
