பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் தனது பெயர் இடம்பெற்றது குறித்து, உலகப் பெரும் பணக்காரர் எலான் மஸ்கின் சகோதரர் கிம்பல் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார்.
சமீபத்தில் வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்களில், கிம்பல் மஸ்கின் பெயர் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் விருந்து நிகழ்ச்சிகள், சந்திப்பு தேதிகள் மற்றும் எப்ஸ்டீன் ஒரு பெண்ணை கிம்பலுக்கு அறிமுகம் செய்து வைத்ததற்கான நன்றியறிவிப்புகள் உள்ளிட்ட மின்னஞ்சல் உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன.
இதுகுறித்து எக்ஸ் (X) தளத்தில் கிம்பல் மஸ்க் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
2012-ஆம் ஆண்டு நான் ஒரு பெண்ணைச் சந்தித்தேன். அவர் அப்போது 30 வயதானவர். அவரை எனது நண்பர் மூலமாகவே சந்தித்தேன்; எப்ஸ்டீன் எங்களுக்கு இடையில் இடைத்தரகராகச் செயல்படவில்லை.
எப்ஸ்டீன் ஒரு ‘அரக்கன்’. நியூயார்க்கில் உள்ள அவரது அலுவலகத்தில் பகல் நேரத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே அவரைச் சந்தித்துள்ளேன். அதன் பிறகு அவரைச் சந்திக்கவில்லை; அவரது தீவுக்கும் நான் சென்றதில்லை. ஆயிரக்கணக்கானோருக்கு நான் அனுப்பும் ‘செய்தி மடல்’ சந்தாதாரராக அவர் இருந்ததாலேயே, எனது பெயரில் அதிக மின்னஞ்சல்கள் அவரிடம் இருந்துள்ளன.
இந்த ஆவணங்களில் கிம்பல் மஸ்க் மட்டுமன்றி, எலான் மஸ்க் பெயரும் இடம் பெற்றுள்ளது. எப்ஸ்டீன் தனது தீவுக்கு வருமாறு பலமுறை அழைப்பு விடுத்தும், தாம் அங்கு செல்லவில்லை என்று எலான் மஸ்க் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் கிம்பல் மஸ்க் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
