இந்திய வாகன சந்தையில் 7 சீட்டர் கார்களுக்கு எப்போதும் மவுசு அதிகம். குறிப்பாக, நடுத்தர குடும்பங்களின் ஃபேவரைட் தேர்வாக இருக்கும் மாருதி சுஸுகி எர்டிகா நீண்டகாலமாக இத்துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ஆனால், தற்போது ஜப்பானைச் சேர்ந்த பிரபல நிறுவனமான நிஸான், எர்டிகாவிற்கு கடும் சவாலை அளிக்கத் தயாராகிவிட்டது.
மேலும் நிஸான் நிறுவனம் தனது புதிய ‘க்ராவிட்’என்ற 7 சீட்டர் காரை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை எர்டிகாவை விட சுமார் 3 லட்சம் ரூபாய் குறைவாக (தோராயமாக ரூ. 6 லட்சம் முதல்) இருக்கும் என எதிர்பார்க்கப்படுவது கார் பிரியர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் நிஸான் க்ராவிட் கார், ஏற்கனவே சந்தையில் உள்ள ரெனால்ட் ட்ரைபர் காரின் அதே சிஎம்எஃப்-ஏ பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 1.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்படலாம் என்றும், மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் வசதிகள் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் கவர்ச்சிகரமான ஜப்பானிய டிசைன், நவீன இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் கழற்றக்கூடிய மூன்றாவது வரிசை இருக்கைகள் போன்ற சிறப்பம்சங்களுடன் வரவிருக்கும் இந்த கார், பட்ஜெட் விலையில் பெரிய காரை எதிர்பார்க்கும் இந்தியக் குடும்பங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
