கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி (TNPSC) குரூப் 2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வில் ஏற்பட்ட கடும் குளறுபடிகள் காரணமாகத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஹால் டிக்கெட் குளறுபடி, தேர்வு மைய ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குழப்பம் ஆகியவற்றால் ஆயிரக்கணக்கான தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்வாணையம் நடத்திய ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் தற்போது அதிரடி நடவடிக்கைகள் பாய்ந்துள்ளன.
தேர்வுப் பணிகளில் மெத்தனமாக இருந்ததாக 2 உதவிப்பிரிவு அலுவலர்கள், 2 நிரலர்கள் (Programmers), 2 பிரிவு அலுவலர்கள் மற்றும் ஒரு சார்புச் செயலாளர் (Under Secretary) என மொத்தம் 6 பேர் தற்காலிகமாகப் பணிநீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ளனர். மேலும், ஒரு துணைச் செயலாளர் (Deputy Secretary) மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கத் தேர்வாணையம் பரிந்துரைத்துள்ளது. ஏற்கனவே தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் மாற்றப்பட்ட நிலையில், தற்போது கீழ்நிலை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இனிவரும் தேர்வுகளில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்ற நம்பிக்கையைத் தேர்வர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
