சீனாவில் தற்போது மில்லினியல் பெற்றோர்களிடையே “ரிவர்ஸ் பேரண்டிங்” (Reverse Parenting) என்ற புதிய வளர்ப்பு முறை மிகவும் பிரபலமாகி வருகிறது. இதில் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கட்டளையிடுவதற்குப் பதிலாக, குழந்தைகளின் இடத்திலிருந்து சிந்தித்துச் செயல்படுகிறார்கள்.
உதாரணமாக, ஒரு குழந்தை குளிரில் மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்லப் பிடிவாதம் பிடித்தால், தாய் அதைத் தடுக்காமல் குழந்தையோடு வெளியே சென்று அந்த அனுபவத்தை உணர வைக்கிறார். இதேபோல், படிப்பை விட்டுவிட்டு கேமிங் துறையில் சேர விரும்பிய ஒரு சிறுவனுக்கு, ஒரு நாளைக்கு 16 மணிநேரம் விளையாட வேண்டும் என்ற கடுமையான நிபந்தனையுடன் அனுமதி அளித்தனர்.
மூன்றே நாட்களில் அந்தச் சிறுவன் கேமிங் என்பது நினைப்பது போல எளிதல்ல என்பதைப் புரிந்து கொண்டு மீண்டும் படிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கினான்.
இந்த முறையில் மூன்று முக்கிய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. முதலாவதாக, ‘ரோல் ரிவர்சல்’ முறையில் பெற்றோர்கள் தங்களை பலவீனமானவர்களாகக் காட்டிக்கொண்டு குழந்தைகளிடம் உதவி கோருவதன் மூலம் அவர்களுக்குப் பொறுப்புணர்வை வளர்க்கிறார்கள்.
இரண்டாவதாக, ‘விளைவுகளை உணர வைத்தல்’ மூலம் குழந்தைகள் தங்கள் முடிவுகளால் ஏற்படும் கஷ்டங்களை நேரடியாக அனுபவித்து திருந்த வழிவகை செய்கிறார்கள். மூன்றாவதாக, ‘மிரர்டு ரெஸ்பான்ஸ்’ முறையில் குழந்தை அடம் பிடித்துத் தரையில் உருண்டால், பெற்றோரும் அதேபோல் செய்து காட்டி குழந்தையின் பிடிவாதத்தை மாற்றுகிறார்கள்.
கண்டிப்புடன் வளர்ப்பதை விட, அனுபவங்கள் வாயிலாகக் குழந்தைகளுக்குப் புரிய வைக்கும் இந்த முறை சீனப் பெற்றோர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
