அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் வசிக்கும் ‘ஜாரவா’ பழங்குடியினர், உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறார்கள். சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பே ஆப்பிரிக்காவிலிருந்து இடம் பெயர்ந்த இவர்களின் முன்னோர்கள், இன்றும் நவீன நாகரிகத்தின் வாடையே படாமல் காடுகளுக்குள் வாழ்ந்து வருகின்றனர்.
வெறும் 400 முதல் 500 பேர் மட்டுமே எஞ்சியுள்ள இந்தச் சமூகம், வேட்டையாடுதல் மற்றும் மீன்பிடித்தலை மட்டுமே நம்பி வாழ்கிறது. இவர்களது பகுதிக்குள் நுழைய இந்திய அரசு கடுமையான தடைகளை விதித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், வெளிமனிதர்களின் தொடர்பால் இவர்களுக்குப் புதிய நோய்கள் பரவும் அபாயம் இருப்பதுதான்.
ஜாரவாக்கள் வெளிமனிதர்களைப் பார்த்தாலே வில் மற்றும் அம்புகளுடன் தாக்க வருவதற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாட்டினரின் வருகையால் இவர்கள் சந்தித்த துயரங்களும், நில ஆக்கிரமிப்புகளுமே இவர்களை வன்முறையாளர்களாக மாற்றியுள்ளது. உண்மையில், அவர்கள் தங்கள் நிலத்தையும், கலாச்சாரத்தையும் காக்கவே போராடுகிறார்கள். உடை, தொழில்நுட்பம் என எதையும் ஏற்காமல், இன்றும் பழங்கால முறையிலேயே வாழும் ஜாரவாக்கள், மனித குல வரலாற்றின் ஒரு வாழும் சாட்சியாக விளங்குகிறார்கள்.
