நீலகிரி மாவட்டம் உதகை அருகே, புலி தாக்கியதில் தோடர் இனத்தை சேர்ந்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உதகை அருகே சின்ன காடிமந்து பகுதியில், புலி தாக்கியதில் தோடர் இனத்தைச் சேர்ந்த 57 வயதாகும் புஷ்தாள் குட்டன் என்பவர் உயிரிழந்தார்.
பாதி உடலை புலி தின்ற நிலையில் காட்டுப் பகுதிக்குள் உடல் கண்டெடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
புஷ்தாள் குட்டன், காட்டுப் பகுதிக்குள் சென்ற போது புலி தாக்கியிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து புலியை கூண்டுவைத்து பிடித்து அடர்வனப்பகுதிக்குள் விட வலியுறுத்தி, உதகை-கூடலூர் தேசிய நெடுஞ்சாலை, சோலூர் ஜங்ஷன் பகுதியில் பழங்குடியின மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி புலியின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
