உலகளவில் நிகழ்ந்த பல முக்கியமான மாற்றங்களின் பின்னால் அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்பு பெருமளவில் இருந்து வருகிறது.
அரசு, தனியார் துறைகளுக்கு அடுத்தபடியாக ஒரு நாட்டின் வளர்ச்சியில் இவை கணிசமாகப் பங்களிக்கின்றன. சமூக மாற்றம், முன்னேற்றத்திற்கான முன்னெடுப்புகளில் அவ்வமைப்புகளில் பணியாற்றுபவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னேற்றத்திற்கான அம்சங்கள் சென்று சேராத பகுதிகளுக்குச் சென்று பணியாற்றுவதிலும் அங்குள்ள மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வதற்காகச் செயலாற்றுவதிலும் அரசு சாரா அமைப்புகளுக்கு (Non-Government Organisations) நிகர் எதுவுமில்லை. பல நேரங்களில் அரசுக்கும் மக்களுக்குமான பிணைப்பை வலுப்படுத்துவதாகவும் இவ்வமைப்புகள் செயல்படுகின்றன.
உலகம் முழுக்கச் சுமார் 1.2 கோடிக்கும் அதிகமான அரசு சாரா அமைப்புகள் செயல்படுவதாகச் சொல்லப்படுகிறது. இவற்றில் கணிசமானவை இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் மட்டும் இவ்வாறு சுமார் 40 லட்சம் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகத் தகவல்களைப் பரப்புவது, அரசின் கொள்கைகளைப் பரப்புவது, ஆய்வுகளை மேற்கொள்வது போன்ற அறிவுசார் கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் சில அரசு சாரா அமைப்புகள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன.
கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளுக்கு உதவுகிற வகையிலான சேவைகளைச் சில அமைப்புகள் வழங்குகின்றன. சுற்றுச்சூழல் மேம்பாட்டினை முன்னிறுத்தும் வகையிலும் வலுப்படுத்தும் வகையிலும் சில செயல்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட நோக்கங்களோடு இயங்குபவையும் உண்டு. சில அமைப்புகளில் குறிப்பிட்ட செயல்பாடுகளுக்காகத் தனித்தனிப் பிரிவுகளும் இருப்பதுண்டு.
இரண்டாம் உலகப் போருக்கு முன்னதாகவே, மேற்கத்திய நாடுகளில் இந்தத் தன்னார்வத் தொண்டு அமைப்புகளின் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. என்றபோதிலும், 1945-ல் ஐக்கிய நாடுகள் அவை தோற்றுவிக்கப்பட்ட பின்னரே இவற்றின் பெருக்கம் நிகழ்ந்தது எனலாம்.
இந்த அரசு சாரா அமைப்புகள் லாப நோக்கம் அற்றதாக, உலகைச் சிறந்த வகையில் வடிவமைப்பதாக, தன்னலமற்ற சேவையை ஆற்றுவதாக, எதிர்காலத் தலைமுறையினருக்குச் சிறப்பான வாழ்விடத்தை விட்டுச் செல்கிற நோக்கமுள்ளதாக இருப்பது அவசியம். பெரும்பாலானவை அவற்றைச் செவ்வனே பின்பற்றுகின்றன.
மெடிசின்ஸ் சான்ஸ் ப்ராண்டியர்ஸ், கேர் போன்று சர்வதேச அளவில் செயல்படுகிற அமைப்புகள் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. சில அமைப்புகள் குறிப்பிட்ட நாடுகளில் மக்களிடம் செல்வாக்கு பெற்றுள்ளன. அதற்கேற்றவாறு அவற்றின் செலவினங்களும் அமைகின்றன. ஸ்மைல் பவுண்டேஷன், ஹெல்ப்ஏஜ் இந்தியா, சைல்டு ரைட்ஸ் அண்ட் யூ போன்றவை இந்தியாவில் புகழ் பெற்றுள்ளன.
வறுமை ஒழிப்பு, குழந்தைகள் நலன், மனித உரிமை என்று பலவற்றை இவை முன்னெடுத்தாலும் போர் பாதிப்பு, தொற்றுநோய் பரவுகிற காலகட்டங்களில் இவற்றின் பங்களிப்பினை எதனாலும் ஈடு செய்ய முடியாது.
அரசு சாரா அமைப்புகளின் பங்களிப்பைச் சிறப்பிக்கிற வகையில், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 27 அன்று ‘உலக அரசு சாரா அமைப்புகள் தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைச் செயல்படுத்துவதில் அரசு சாரா அமைப்புகள் முக்கியப் பங்கு வகிப்பதை அங்கீகரிக்கிற வகையில் இத்தினம் பின்பற்றப்படுகிறது.
2010-ம் ஆண்டு பால்டிக் கடல் பகுதி நாடுகளிலுள்ள தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மன்றத்தில் இதற்கான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. ஆனாலும், 2014-ம் ஆண்டு முதலே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தன்னார்வத் தொண்டு அமைப்புகள் தீவிரமாகப் பணியாற்றுவதைத் தொடர்ந்து ஊக்குவிக்கும் வகையிலும் பொது, தனியார் துறைகளுடன் என்ஜிஓக்கள் ஒன்றிணைந்து செயல்படுவதை ஊக்குவிக்கும் வகையிலும் இது பின்பற்றப்படுகிறது.
உலகின் மூலைமுடுக்கெங்கும் மனித உரிமைகள் மறுக்கப்படுவதற்கு எதிராகச் செயலாற்றுவதிலும் நிலையான வளர்ச்சியை முன்னிறுத்துவதிலும் நெருக்கடிக் காலங்களில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய உதவிகள் கிடைப்பதிலும் இவற்றின் பங்கு அளப்பரியது.
எவ்விதப் பிரச்சினைகளும் இல்லாமல் மனித சமூகம் சுமூகமாக வாழ்வது ஒரு கனவு. அதனைச் செயல்படுத்துவதில் எத்தனை சதவிகிதம் பலனளிக்கிறது என்று பயணிப்பவர்களில் பெருவெற்றிகளைக் காண்பவர்கள் இவ்வுலகத்தின் நல்மாற்றங்களுக்கான விதைகளாகத் திகழ்கின்றனர். அப்படிப்பட்டவர்களை நினைவுகூரவும் இது ஒரு சிறப்பான தருணமாகும். ‘அனைவரையும் உள்ளடக்கிய செயல்பாடுகளின் வழியே கண்ணியத்தை மீட்டெடுப்பது’ 2026-ம் ஆண்டுக்கான ’உலக அரசு சாரா அமைப்புகள் தின’த்தின் கருப்பொருளாகக் கொள்ளப்பட்டுள்ளது.
கரையே காண இயலாது என்ற அவநம்பிக்கையுடன் துன்பக்கடலில் தத்தளிப்பவர்களைக் கடைத்தேற்றுவதே இவ்வமைப்புகளோடு தம்மைப் பிணைத்துக்கொண்டு பணியாற்றுபவர்களின் எண்ணமாக இருந்து வருகிறது. அவர்களால் தமது வாழ்வில் வெளிச்சத்தைக் கண்டவர்கள் பலர்.
அப்படிச் செயலாற்றுபவர்களை அங்கீகரிக்கவும் அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் போற்றவும் சமூகத்திலுள்ள பிரச்சினைகளை எடுத்துரைக்கவும் ஒடுக்கப்பட்ட நிலையிலிருப்பவர்களுக்குக் குரலெழுப்பவும் நேர்மறையான மாற்றங்களை உருவாக்க நம்மை உந்தித் தள்ளவும் இத்தினம் தூண்டுகோலாக அமையட்டும்!
- ரோகிணி
