தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை கடந்த 22-ம் தேதி முதல் தொடங்கி படுவேகமாக நடத்தி வருகிறது.
அந்த வகையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPM) முதற்கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம், இந்த முறை கூடுதல் தொகுதிகளைக் கேட்டு திமுகவிற்கு அழுத்தம் கொடுத்துள்ளது.
“6 போதாது.. இன்னும் வேணும்” என்ற ரீதியில் சிபிஎம் தரப்பு தனது விருப்பத்தை வலுவாக முன்வைத்துள்ளது.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், “கடந்த முறையை விட இந்த முறை அதிக தொகுதிகளைக் கேட்டுள்ளோம்” எனத் தனது கோரிக்கையை வெளிப்படையாகவே அறிவித்தார்.
அதேசமயம், கூட்டணிக்குள் எந்த விரிசலும் இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், “வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவே அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும்” என அதிரடியாகத் தெரிவித்தார். திமுக எத்தனை தொகுதிகளை ஒதுக்கப் போகிறது, சிபிஎம் கேட்டது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் இப்போதே எகிறியுள்ளது.
