இந்தியாவுடனான உறவை மேம்படுத்தும் கொள்கையில் எந்தவித மாற்றமும் இல்லை என்று சீனா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா தன்னிச்சையாகப் புதிய பெயர்களைச் சூட்டி வருவதற்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளது.
மேலும் சீனாவின் இத்தகைய செயல்பாடுகள் இருநாடுகளுக்கு இடையிலான உறவைச் சீர்படுத்தும் முயற்சிகளைப் பாதிக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் எச்சரித்திருந்தது. இதற்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், அருணாச்சலப் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என்றும், அங்குள்ள இடங்களுக்குப் பெயரிடுவது தங்களது அதிகாரத்திற்கு உட்பட்டது என்றும் மீண்டும் வாதிட்டுள்ளார்.
இருப்பினும், இந்தியாவுடனான உறவைச் சீராகப் பராமரிப்பதிலும், மேம்படுத்துவதிலும் சீனா உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் ஒரே திசையில் சிந்தித்து, பரஸ்பர உறவை வலுப்படுத்தப் பாடுபட வேண்டும் என்பதே சீனாவின் தற்போதைய நிலைப்பாடாக உள்ளது.
இந்நிலையில் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நிலவி வரும் சூழலில், உறவை மேம்படுத்தும் சீனாவின் இந்தக் கருத்து சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
அதே வேளையில், இந்தியாவின் இறையாண்மையைப் பாதிக்கும் சீனாவின் எல்லை அத்துமீறல்களை இந்தியா தொடர்ந்து உலக அரங்கில் நிராகரித்து வருகிறது.
