பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாக்கும் முயற்சி!

Estimated read time 1 min read
மார்ச் 3 : உலக வனவிலங்கு தினம்!

சுழலும் பூமி, ஓடும் நீர், வீசும் காற்று, பரந்த வானம், துளிர்க்கும் தாவரங்கள், மிரட்டும் விலங்கினங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் அழகியலை நமக்கு பரிசாக வழங்கியுள்ளது இயற்கை.
இது உயிரினங்கள் வாழ்வதற்குரிய அடிப்படை ஆதாரமாகும். மனிதன் தன்னுடைய உணவு தேவையை பூர்த்தி செய்ய இயற்கையை சார்ந்தே வாழும் நிலை உள்ளது.
இதில் முக்கிய பங்கு வகிக்கிறது விலங்குகள். உணவுச் சங்கிலியைப் பராமரித்து சுற்றுச்சூழல் அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க வனவிலங்குகள் உதவுகின்றன.
பல்லுயிர் பெருக்கம் நடைபெறுவதற்கும் காலநிலை மாற்றத்தைப் பேணுவதற்கும் இவை துணை புரிகின்றன. மேலும் பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இயற்கையின் பன்முகத்தன்மையை உறுதி செய்கின்றன.
இத்தகைய விலங்குகளை காக்கும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மூன்றாம் தேதி “உலக வன விலங்கு தினம்” கொண்டாடப்படுகிறது.
வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் பன்முகத்தன்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அழியும் நிலையில் உள்ள இனங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தவும் ஐநா பொதுச் சபை, 2013 ம் ஆண்டு டிசம்பர் 20ஆம் தேதி இந்த தினத்தை அறிவித்தது.


காடுகள், காப்பகங்கள் மற்றும் சரணாலயங்கள் மூலம் பாதுகாக்கப்படும் வன விலங்குகள் மனிதர்களின் செயல்களால் பல்வேறு விதங்களில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன.
பெருகிவரும் மக்கள் தொகையின் காரணமாக வாழுமிட பற்றாக்குறை ஏற்படுவதாலும் காட்டுத் தீ போன்ற இயற்கை சீற்றங்களினாலும் வனங்கள் பெருமளவு அழிக்கப்பட்டு விட்டன. இதனால், விலங்குகள் தங்கள் இருப்பிடத்தை விட்டு நகரும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
எனவே இவ்விலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டி, ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருப்பொருளுடன் “உலக வன விலங்கு தினம்” கொண்டாடப்படுகிறது.
மருத்துவ மற்றும் நறுமண தாவரங்கள், ஆரோக்கியம், பாரம்பரியம் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் இந்த வருடம் நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
காட்டுயிர்கள் மற்றும் தாவரங்களின் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் போட்டிகள், விழிப்புணர்வுப் பேரணிகள், வனத்துறை சார்ந்த கருத்தரங்குகள் ஆகியவை நடைபெறுகின்றன.
1973 ஆம் ஆண்டு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில், அழியும் நிலையில் உள்ள காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த உடன்படிக்கை கையெழுத்தானது.
இந்த மாநாட்டில் 184 நாடுகள் பங்கு பெற்றன. Cites என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தத்தின்படி வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் ஒழுங்கு படுத்தப்பட்டு, அவை பாதுகாக்கப்படுகின்றன.


ஆபத்தான நிலையில் உள்ள உயிரினங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கு அரசாங்கங்கள் வழங்கும் உரிமங்கள் மற்றும் சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் 1972 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘வன உயிர்ப் பாதுகாப்புச் சட்டம்’ அரியவகை உயிரினங்களைப் பாதுகாக்கவும் வேட்டையைத் தடுக்கவும் உதவுகிறது.
வனவிலங்குகளையும் அவற்றின் வாழ்விடங்களையும் காக்கும் அவசியத்தை உணர்த்தவே உலக வனவிலங்கு தினம் கடைபிடிக்கப்படு வருகிறது.
இது வெறும் கொண்டாட்டம் மட்டுமல்ல, பூமியின் பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த முயற்சியும் ஆகும்.
– எஸ். வாணி

Please follow and like us:

You May Also Like

More From Author