இந்தியாவின் வான் பாதுகாப்பு அரணை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடமிருந்து கூடுதலாக ஐந்து எஸ்-400 ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ‘சுதர்ஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை அமைப்பு, ஏற்கனவே எல்லையில் நிலைநிறுத்தப்பட்டு பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற அண்டை நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது.
இது குறிப்பாக, கடந்த காலங்களில் பாகிஸ்தான் எல்லைக்குள் 300 கிலோமீட்டர் தொலைவில் பறந்த போர் விமானங்களை துல்லியமாகக் கண்டறிந்து அழித்ததன் மூலம், இந்திய வான்பரப்பின் அசைக்க முடியாத சக்தியாக இது உருவெடுத்துள்ளது. தற்போது அதிகரித்து வரும் உலகளாவிய போர் பதற்றங்களைக் கருத்தில் கொண்டு, இந்த நவீன ஏவுகணை அமைப்புகளை கூடுதலாகப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த புதிய எஸ்-400 ஏவுகணைகளின் வருகை, இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு எல்லைகளில் ஒரு வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிரி நாடுகளின் ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை வெகு தொலைவிலேயே கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்ட இந்த ரேடார் அமைப்புகள், இந்திய விமானப்படைக்கு ஒரு மிகப்பெரிய ‘கேம் சேஞ்சராக’ அமையும்.
மேலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் இந்த அதிரடி நடவடிக்கை, எல்லை தாண்டிய அச்சுறுத்தல்களை முறியடிப்பதோடு மட்டுமல்லாமல், ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவின் தற்காப்பு வலிமையை உலக நாடுகளுக்குப் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது. இதன் மூலம் இந்திய எல்லைகளில் ஒரு பலமான பாதுகாப்பு வளையம் உருவாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
