அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உடனான கடுமையான மோதலுக்கு மத்தியில், ஈரான் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. உலக நாடுகளின் எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ பாதையை மீண்டும் அனைத்து நாடுகளின் பயன்பாட்டிற்கும் திறப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும், ஈரானுக்கும் இடையே கடந்த சில நாட்களாகப் பயங்கர போர் நடைபெற்று வருகிறது. இந்த மோதலில் ஈரான் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தாலும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீதும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திப் பதிலடி கொடுத்துள்ளது.
இப்போரின் ஒரு பகுதியாக, ஈரான் தனது எல்லைக்குட்பட்ட ஹார்முஸ் ஜலசந்தி பாதையை மூடியது. முதலில் சீனக் கப்பல்களுக்கு மட்டும் அனுமதி அளித்த ஈரான், பின்னர் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைத் தவிர மற்ற நாடுகளுக்கு அனுமதி வழங்கியது. இதனால் உலக அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவானது.
இப்போரின் போது ஈரான் தற்செயலாகச் சில வளைகுடா நாடுகள் மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் அந்த நாடுகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்காக ஈரான் தற்போது மன்னிப்பு கோரியுள்ளது. மேலும், “அண்டை நாடுகள் எங்களைத் தாக்காத வரை, நாங்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்த மாட்டோம்” என்றும் ஈரான் உறுதியளித்துள்ளது.
பல்வேறு சர்வதேச அழுத்தங்களுக்குப் பிறகு, தற்போது ஈரான் ஒரு படி பின்வாங்கியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் கப்பல்களும் செல்லலாம் என ஈரான் அறிவித்துள்ளது. இதன் மூலம் உலகளவில் நிலவி வந்த எரிபொருள் தட்டுப்பாடும், விலை ஏற்ற அபாயமும் முடிவுக்கு வந்துள்ளது.
உலகிற்குத் தேவையான கச்சா எண்ணெய்யில் சுமார் 25 சதவீதப் போக்குவரத்து இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. இந்தப் பாதை மூடப்பட்டதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு எரிபொருள் இறக்குமதியில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது இப்பாதை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால், கச்சா எண்ணெய் வரத்து சீராகி, பெட்ரோல் – டீசல் விலையில் ஸ்திரத்தன்மை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஈரானின் இந்த ‘குட் நியூஸ்’ உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணித்துள்ளது.
