அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் முற்றியுள்ள சூழலில், ஒருவேளை அணு ஆயுதப் போர் வெடித்தால் ஒட்டுமொத்த உலகமும் சந்திக்கப்போகும் பேரழிவுகள் குறித்து அதிர்ச்சியூட்டும் ஆய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
புகழ்பெற்ற ‘நேச்சர்’ (Nature) அறிவியல் இதழில் வெளியான ஆய்வறிக்கையின்படி, உலகில் உள்ள 12,000 அணு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டால், சுமார் 500 கோடி மக்கள் உயிரிழப்பார்கள் என்றும், பூமி முழுவதும் ‘அணுக்காலக் குளிர்’ (Nuclear Winter) நிலவும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அணு ஆயுதப் வெடிப்புகளால் ஏற்படும் பிரம்மாண்ட நெருப்புப் பிழம்புகள், சுமார் 100 மில்லியன் டிகிரி செல்சியஸ் வெப்பத்தை உமிழும். இதனால் நகரங்களும் காடுகளும் எரிந்து சாம்பலாகும். இதிலிருந்து வெளியேறும் சுமார் 150 மில்லியன் டன் கரும்புகை மற்றும் துகள்கள் வளிமண்டலத்தின் ஓசோன் படலத்தைச் சிதைத்து, சூரிய ஒளியை மறைக்கும். இதனால் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பூமி இருளில் மூழ்கி, தொடர் பனிப்பொழிவு ஏற்படும்.
இந்தக் கடும் குளிரிலும், கதிர்வீச்சுப் பாதிப்பிலும் மனிதர்கள் உயிர்வாழத் தகுதியான இடங்களாக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே இருக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
புவியியல் ரீதியாக இவை மற்ற நாடுகளிலிருந்து தனித்து இருப்பதாலும், கடல்சார் தட்பவெப்ப நிலை நிலவுவதாலும், அங்கு விவசாயம் ஓரளவு சாத்தியப்படும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அங்கிருப்பவர்களும் கதிர்வீச்சிலிருந்து தப்பிக்க நிலத்தடி அறைகளிலேயே தஞ்சம் புக வேண்டியிருக்கும்.
அணு ஆயுதப் போரின் நேரடித் தாக்கத்தால் கோடிக்கணக்கானோர் இறந்தாலும், அதன் பின்னர் ஏற்படும் விளைவுகளே மிக மோசமானதாக இருக்கும். சூரிய ஒளி இல்லாததால் ஒளிச்சேர்க்கை தடைபட்டு பயிர்கள் அனைத்தும் கருகிவிடும். உக்ரைன், அமெரிக்கா போன்ற உலகின் ‘தானியக் களஞ்சியங்கள்’ பனிப் பாலைவனங்களாக மாறும். உலகளாவிய மழைப்பொழிவு 90 சதவீதம் வரை குறையும். இதனால் கடும் வறட்சி நிலவும். ஓசோன் படலம் சிதைவதால், பிற்காலத்தில் சூரிய ஒளி நேரடியாகப் பட்டு தோல் புற்றுநோய் மற்றும் பார்வையிழப்பு ஏற்படும்.
தற்போது இஸ்ரேல் – ஈரான் பதற்றம் ஒருபுறமிருக்க, 4 ஆண்டுகளாக நீடிக்கும் ரஷ்யா – உக்ரைன் போர், தாலிபான் – பாகிஸ்தான் எல்லை மோதல், சீனா – தைவான் பதற்றம் என உலகம் முழுவதும் போர்க்குணமிக்க சூழல் நிலவுகிறது. இந்தச் சூழலில் அணு ஆயுதப் போர் என்பது மனித குலத்தின் அழிவிற்கே வழிவகுக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும் அணு ஆயுதப் போருக்குப் பிந்தைய ‘அணுக்காலக் குளிரில்’ கண்டங்களின் உட்புற வெப்பநிலை -20°C முதல் -30°C வரை குறையக்கூடும். இது பூமியின் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் மண்டலத்தையே ர்குலைத்துவிடும்.
