ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றத்தால், உலகளாவிய எண்ணெய் விநியோக மையமான ஹார்முஸ் ஜலசந்திக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலில், இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது முக்கியமானதாகிறது.
ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதல் செய்ய 30 நாட்கள் மட்டுமே அனுமதி என அமெரிக்கா கூறியதாக வெளியான தகவல்கள் அரசியல் தளத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
ஆனால், இதைப் பற்றி அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும், இந்தியாவின் எரிசக்தித் தேவைக்கு எவ்விதத் தடையுமில்லை என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஏதேனும் சிக்கல் உருவானாலும், அதை எதிர்கொள்ள இந்தியா முழுமையாகத் தயாராக உள்ளது. தற்போது இந்தியாவிடம் போதுமான அளவு கச்சா எண்ணெய், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் சமையல் எரிவாயு கையிருப்பு உள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் சிக்கியுள்ள எண்ணெய் அளவை விட, இந்தியாவிற்குத் தேவையான கூடுதல் எரிசக்தி கையிருப்பில் இருப்பதாக அரசு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தேவைப்பட்டால் உலகின் பிற பகுதிகளில் இருந்தும் இறக்குமதியை அதிகரிக்க மத்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டுள்ளது.
மங்களூர் பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதாக வெளியான தகவல்கள் முற்றிலும் தவறானவை; அது தடையின்றி இயங்கி வருகிறது.
மேலும், நாட்டின் உள்நாட்டு எரிசக்தித் தேவையை உறுதிப்படுத்த, அனைத்து எல்பிஜி சுத்திகரிப்பு நிலையங்களும் உற்பத்தியை அதிகரிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன. பெட்ரோ கெமிக்கல் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யாமல், உள்நாட்டுத் தேவைக்காக மட்டுமே பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.
