சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் மனைவியும், உலகச் சுகாதார அமைப்பின் காசநோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்புக்கான நல்லெண்ண தூதருமான பெங் லீயுவான் அம்மையார் மார்ச் 18ஆம் நாள், உலகச் சுகாதார அமைப்பின் 2026ஆம் ஆண்டு உலக காசநோய் தினத்துக்கான காணொளி வழி கூட்டத்தில் எழுத்து மூல உரை நிகழ்த்தினார்.
தன்னுடைய உரையில், காசநோய் தடுப்புப் பணிக்கு சீன அரசு பெரும் முக்கியத்துவம் அளித்து வருவதைக் குறிப்பிட்ட அவர், அறிவியல் மற்றும் தொழில் நுட்பப் புத்தாக்கத்துடன் காசநோய் தடுப்புத் தொழில் நுட்பத்தின் உயர்வேக வளர்ச்சியை முன்னேற்றி வருவதாகவும், இதன் மூலம் தடுப்புப் பணி மேலும் உயர்நிலைக்கு முன்னேறியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், சீனாவில் 140 கோடி நகர மற்றும் கிராம மக்களுக்குச் சேவை புரிந்த சுகாதார வலைப்பின்னல், காசநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை பெறும் வாய்ப்புகளைப் பெரிதும் அதிகரித்துள்ளது. இதன் மூலம், காசநோய் ஏற்படுத்தும் விகிதம் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. இதனால் சீனா, காசநோய் குறைந்த மற்றும் நடுத்தர பரவல் கொண்ட நாடுகளில் ஒன்றாக உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக, சீனாவின் 10 லட்சத்துக்கும் மேலான தன்னார்வலர்கள் காசநோய் தடுப்புப் பணியில் ஈடுபட்டு, 80 ஆயிரத்துக்கும் மேலான தன்னார்வச் சேவை திட்டப்பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் ஆக்கமுடன் செயல்பட்டு, காசநோய் தடுப்பின் சாதனைகளை அனைத்து மனித குலத்துக்கும் பயனளிக்கச் செய்ய வேண்டும் என்றும் பெங் லீயுவான் வேண்டுகோள் விடுத்தார்.
