அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் இரண்டாவது முறை பதவியேற்றது முதல், அந்நாட்டின் குடியேற்றக் கொள்கைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவாக, 2024-ஆம் ஆண்டை விட 2025-ஆம் ஆண்டில் அமெரிக்கா வழங்கிய விசாக்களின் எண்ணிக்கை 11% சரிவைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக, கடந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டில் சுமார் 2.5 லட்சம் விசாக்கள் குறைவாக வழங்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் தான் 84,000 விசாக்களை இழந்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். பல்வேறு விசா பிரிவுகளில் இந்த வீழ்ச்சி அப்பட்டமாகத் தெரிகிறது. உயர்கல்விக்காகச் செல்லும் மாணவர்களுக்கான F1 விசாக்கள் 3.44 லட்சத்திலிருந்து 2.38 லட்சமாகக் குறைந்துள்ளன. அதேபோல், சுற்றுலாப் பயணிகளுக்கான B1 மற்றும் B2 விசாக்கள் சுமார் 2 லட்சம் வரை குறைந்துள்ளன.
குடும்ப உறவினர்களுக்கான விசாக்கள் 27% சரிந்துள்ளதோடு, கணவன் அல்லது மனைவிக்கு வழங்கப்படும் ‘ஸ்பவுஸ் விசா’பாதியாகக் குறைந்துள்ளதால் பல குடும்பங்கள் பிரிந்து வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது.இந்திய ஐடி பணியாளர்களுக்கு மிகவும் முக்கியமான H-1B வேலை விசாக்களுக்கு இப்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான பாதுகாப்புப் பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்கக் கனவுடன் இருக்கும் இந்திய இளைஞர்கள் மற்றும் தொழில்முறை பணியாளர்கள் பெரும் கவலையில் உள்ளனர். விசா நடைமுறைகள் சிக்கலாக்கப்பட்டிருப்பதால், வரும் காலங்களில் அமெரிக்கா செல்வோரின் எண்ணிக்கை மேலும் குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
