ஏப்ரல் 6 வரை தாக்கமாட்டோம் – ஈரான் கோரிக்கையை ஏற்ற அமெரிக்கா!

Estimated read time 1 min read

வாஷிங்டன் : ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் திட்டத்தில் தற்காலிக இடைவெளி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல்களை 10 நாட்களுக்கு ஒத்திவைத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் வெளியிட்ட பதிவில், “ஈரான் அரசாங்கத்தின் கோரிக்கையை ஏற்று, எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் காலத்தை 10 நாட்கள் ஒத்திவைக்கிறேன். இந்த அவகாசம் 2026 ஏப்ரல் 6 அன்று இரவு 8 மணி (கிழக்கு நேரம்) வரை அமலில் இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும், “போலி ஊடகங்கள் மற்றும் மற்றவர்கள் கூறும் தவறான செய்திகளுக்கு மாறாக, எங்கள் பேச்சுவார்த்தைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றன” என்றும் டிரம்ப் கூறினார்.கடந்த சனிக்கிழமை, ஹார்முஸ் ஜலசந்தியை எண்ணெய் டேங்கர்களுக்கு திறக்க ஈரானுக்கு 48 மணி நேர அவகாசம் கொடுத்திருந்த டிரம்ப், அதன் பிறகு இரண்டு முறை அந்த காலக்கெடுவை நீட்டித்துள்ளார். இப்போது மேலும் 10 நாட்கள் அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம், வெள்ளை மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்புத் துறை செயலர் பீட் ஹெக்செத் ஆகியோருடன் டிரம்ப் உரையாடினார். அப்போது டிரம்பின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காஃப், “டெஹ்ரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதற்கான வலுவான அறிகுறிகள் உள்ளன” என்று தெரிவித்தார். மேலும், அமெரிக்கா ஈரானுக்கு 15 அம்சங்கள் கொண்ட “நடவடிக்கைப் பட்டியல்” ஒன்றை பாகிஸ்தான் அதிகாரிகள் மூலம் அனுப்பியுள்ளதாகவும், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 10 எண்ணெய் டேங்கர்களை அனுப்ப அனுமதித்துள்ளதாகவும் டிரம்ப் கூட்டத்தில் கூறினார்.

இது பேச்சுவார்த்தையில் ஈரான் தீவிரமாக இருப்பதைக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.அரசியல் பார்வையாளர்கள், டிரம்பின் இந்த 10 நாட்கள் அவகாசம் மத்திய கிழக்கில் அமைதி முயற்சிகளை வலுப்படுத்தும் என்று நம்புகின்றனர். இருப்பினும், பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தால் ஈரானின் எரிசக்தி நிலையங்கள் மீதான தாக்குதல் மீண்டும் தொடங்கும் என்ற எச்சரிக்கையும் அமெரிக்கத் தரப்பில் உள்ளது.இந்த அறிவிப்பு, பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான போர் நான்காவது வாரத்தில் நுழைந்துள்ள நிலையில் வெளியாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author